அக்னி 5 ஏவுகணை: புகைப்படம் வெளியிட்ட பாதுகாப்புத் துறை... இணையத்தில் வைரல்...
அக்னி 5 ஏவுகணையின் முதல் புகைப்படத்தை இந்திய பாதுகாப்புத் துறை நேற்று வெளியிட்டது. இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அக்னி 5 ஏவுகணை MIRVed தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இந்த Multiple Independently-targetable Reentry Vehicles என்பது முதலில் 1960களில் தயார் செய்யப்பட்ட ஒரு ராணுவ தொழில்நுட்பமாகும். ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை நோக்கி அணு ஆயுதங்களை ஏவ அனுமதிப்பதே இதன் திட்டமாகும். பொதுவாக வழக்கமான ஏவுகணையில் ஒரே ஒரு குண்டு மட்டுமே இருக்கும். ஆனால், இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணையில் பல்வேறு குண்டுகளை எடுத்துச் செல்ல முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
மிஷன் திவ்யாஸ்த்ரா திட்டத்தின் கீழ் அக்னி-5 ஏவுகணை சோதனை கடந்த மார்ச் 1-ம் தேதி நடத்தப்பட்டது.இந்த அக்னி-5 ஏவுகணை பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு, திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே எம்ஐஆர்வி ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளது. இந்தபட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இதுகுறித்து டிஆர்டிஓ வட்டாரங்கள், "எம்ஐஆர்வி தொழில்நுட்பத்தில் ஏவப்படும் ஏவுகணைகள் அணுகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. இந்த ஏவுகணைகள் காற்று மண்டலத்தை தாண்டி வெளியே சென்று மீண்டும்கீழ் நோக்கி பாயும்போது பூமிதனது அச்சில் சற்று சுழன்று விட்டிருக்கும். இதை கணக்கில் கொண்டால் மட்டுமே இலக்குகளை குறிதவறாமல் தாக்க முடியும்.இதற்கேற்ப ஏவுகணையில் பொருத்தப்பட்டிருக்கும் கணினியில் தாக்க வேண்டிய இலக்குகளின் வரைபடங்கள் காட்டப்பட்டிருக்கும்.
இந்த ஏவுகணையில் 12 அணுகுண்டுகள் வரை சுமந்து சென்று 12 இலக்குகளை தாக்கி அழிக்கமுடியும். இதன் மூலம் சீனாவின் எந்த பகுதி மீதும் தாக்குதல் நடத்த முடியும். அக்னி 5 ஏவுகணையை நடுவானில் இடைமறித்து தாக்கி அழிப்பது மிகவும் கடினம். அதிகபட்சமாக ஒரு அணுகுண்டை வேண்டுமானால் நடுவானில் இடைமறித்து அழிக்க முடியும். இதர 11 அணுகுண்டுகள் நிச்சயிக்கப்பட்ட இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும்" என தெரிவித்துள்ளன.
போரின் ஆட்டத்தையே மாற்றி அமைக்கும் திறன் படைத்த இந்த அக்னி 5 ஏவுகணையின் முதல் புகைப்படத்தை பாதுகாப்புத் துறை நேற்று வெளியிட்டது. இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.