3.36 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்த ஆகாசா விமான நிறுவனம்! எப்படி தெரியுமா?
விமானங்களுக்கான பாரம்பரிய தண்ணீர் பீரங்கிகளை தவிர்த்ததன் மூலம் 3.36 லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான நிறுவனமான ஆகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்திக் கடந்த 1992-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐநா சபை மாநாட்டில் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து இந்நாள் உலகத் தண்ணீர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாள் தண்ணீரின் சிறப்புகளைக் கூற மட்டுமல்ல, தண்ணீரின் அறியப்படாத உண்மைகள் மற்றும் தண்ணீரின் அவசியங்களை மக்களுக்கு உணர்த்துவதற்கான நாள் என ஐநா சபை தெரிவித்திருந்தது. இந்த ஆண்டின் உலக தண்ணீர் தினத்துக்கான கருப்பொருள் ‘அமைதிக்கான நீர்’ என்பதாகும்.
இந்த நிலையில், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆகாசா என்ற விமான நிறுவனம், 3.36 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்துள்ளதாக அறிவித்துள்ளது. எப்படி தெரியுமா.... கடற்படை மற்றும் திறப்பு விழாக்களின் தண்ணீர் பீய்ச்சுவதை தவிர்த்ததால் 3.36 லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவலை ஆகாசா ஏர் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.