அரேபியர்களுக்கு எதிரானதா #Aadujeevitham?... இயக்குநர் விளக்கம்!
பிரித்விராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் அதற்கு விளக்கமளித்துள்ளார்.
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ், அமலாபால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆடுஜீவிதம். இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்) தழுவி எடுக்கப்பட்டதாகும். மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியிருந்தார்.
கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் சுமார் 10 ஆண்டுகளின் பணிகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நடிகர் பிருத்விராஜின் நடிப்பும், படத்தின் உருவாக்கமும் பாராட்டுக்களைப் பெற்றன. இப்படம், உலகளவில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலை கடந்து சாதனைப் படைத்தது.
இருப்பினும், இத்திரைப்படம் அரேபியர்களைக் கொடூரமானவர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும் சித்திரிப்பதாக சௌதி அரேபியாவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதனுடன், இத்திரைப்படத்திற்கு சௌதியில் தடைவிதித்துள்ளனர். இப்படத்தின் இறுதியில் நஜீப்பைக் காப்பாற்றும் பணக்கார அரேபியராக நடித்த ஜோர்டான் நடிகர் அகேப் நஜன் படத்தின் கதையை (ஸ்கிரிப்ட்) சரியாக படிக்காமல் நடித்துவிட்டதாக, சௌதி மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இந்த சூழலில், ஆடுஜீவிதம் படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி இதற்கு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது, “ஆடுஜீவிதம் திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஆடுஜீவிதம் நாவலின் சினிமா தழுவல்தான். மனித மனதின் உன்னதமே இப்படத்தில் தீவிரமாக பேசப்பட்டிருக்கிறது. நஜீப் வைத்திருந்த கடவுள் நம்பிக்கையால், அக்கடவுள் முதலில் இப்ராஹிம் கத்ரியாகவும் பின் அவனை ரோல்ஸ் ராய்ஸ் காரில் அழைத்துச் செல்லும் அரேபியர் வடிவிலும் வருவதையே கூறியிருக்கிறோம்.
நான் படம் முழுவதும் இந்த விசயத்தைக் கடத்தவே முயற்சி செய்திருக்கிறேன். தனிப்பட்ட நபரையோ, இனத்தையோ, நாட்டையோ, நம்பிக்கைகளையோ புண்படுத்தும் நோக்கில் இப்படம் எடுக்கப்படவில்லை. அரேபியர்கள் இரக்கமும், அனுதாபமும் கொண்டவர்கள் என்பதைக் காட்டவே நஜீப் சாலையை அடைந்ததும் அவனை தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் அழைத்துச் செல்லும் அரேபியரின் கதாபாத்திரம் வைக்கப்பட்டிருந்தது. ஆடுஜீவிதம், சினிமா என்னும் கலை வடிவில்தான் பேசப்பட வேண்டும். சிலர் இப்படத்திற்கு தவறான விளக்கத்தை அளித்து வருகின்றனர்.”
இவ்வாறு ஆடுஜீவிதம் படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி பதிவிட்டுள்ளார்.