Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஏ.ஜி நூரானி: அதிகாரத்திற்கு எதிரான முன்கள வீரர் | மூத்த ஊடகவியலாளர் ஆர்.விஜயசங்கர் எழுதிய அஞ்சலிக் கட்டுரை!

11:39 AM Sep 11, 2024 IST | Web Editor
Advertisement

அரசியலமைப்புச் சட்ட வல்லுனர், நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும், 20க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதிய சிந்தனையாளர் அறிஞர் ஏ. ஜி. நூரானி குறித்து அவருடன் கடந்த 20 ஆண்டுகள் தொழில்முறையில் நெருங்கிய The AIDEM இணைய இதழில் அதன் குழும ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் எழுதிய அஞ்சலிக் கட்டுரை...

Advertisement

இந்தியன் எக்ஸ்பிரஸ் ராம்நாத் கோயங்கா ஆளுகையின் கீழ் இருந்த சமயம். அருண் ஷெளரி தேசிய ஆசிரியர். பெங்களூரின் வசிப்பிட ஆசிரியராக டி.ஜே.எஸ். ஜார்ஜ் இருந்தார். நான் பெங்களூர் அலுவலகத்தில் பயிற்சி உதவி ஆசிரியராக இருந்தேன். அப்போது தான் முதன்முறையாக அப்துல் கஃபூர் நூரானியைப் பார்த்தேன். தலையங்கப் பக்க பத்தி எழுத்தாளராகத் தான் அவர் அறிமுகம். அவரின் ஆளுமை மிரட்சி தருவதாக இருந்தது. அவரிடம் பேசக்கூடத் தயங்கினேன்.

அது 1980களின் நடுப்பகுதி. ஃப்ரண்ட்லைன் ஆரம்பித்து ஒரு வருடம் மட்டுமே ஆகியிருந்த சமயம். அதிகம் வாசிக்கப்பட்டு, பாராட்டப்பட்டு, அதே அளவுக்கு வசைகளுக்கும் ஆளான, ஃபிரண்ட்லைன் பத்தி எழுத்தாளராக அவர் மாறவிருந்தது அப்போது தெரியாது; மாதமிருமுறை வரும் அந்தப் பத்திரிகையின் பொறுப்பு ஆசிரியராக 20 ஆண்டுகள் நான் இருந்தபோதும், பிறகு அதன் ஆசிரியராக மாறிய போதும், இரு வாரங்களுக்கு ஒருமுறை, தொடர்ச்சியாக பேசுமளவுக்கு அவருடன் நெருக்கம் ஏற்படும் என்பதும் அப்போது எனக்கு தெரியாது.

இரண்டாம் முறை சந்திக்கையில் அவருடன் பேசுவதற்கான தைரியத்தை நான் பெற்றிருந்தேன். அது 1990களின் பிற்பகுதி. ஒரு மதியப் பொழுதில் அவர், செய்தி ஆசிரியரை சந்திக்க சென்னையிலுள்ள ஃப்ரண்ட்லைன் அலுவலகத்துக்கு வந்தார். செய்தி ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தால், அவர் என்னுடன் பேசினார். அலுவலகத்தை விட்டுக் கிளம்புவதற்கு முன், ஒரு நல்ல அசைவ உணவகம் இருந்தால் சொல்லும்படி என்னைக் கேட்டார். காரைக்குடி உணவகம் தான் நினைவுக்கு வந்தது. செட்டிநாடு உணவுகளுக்கு பெயர் பெற்ற உணவகம் அது. அவர் எனக்கு நன்றி சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

ஏ.ஜி.நூராணியுடன் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் ஆர் விஜயசங்கர்

சுமாராக ஒரு மாதம் கழித்து, ஒரு தொலைபேசி அழைப்பை நான் ஏற்க நேர்ந்தது. மறுமுனையில் நூரானியின் கணீரென்ற குரல். யாருடன் பேசுகிறாரென தெரிந்து கொள்ள விரும்பினார். என் பெயரை சொன்னதும் அவர், “ஓ! சென்னையில் அற்புதமான உணவகத்தின் பெயரை எனக்கு சொன்னவர் தானே? மிக்க நன்றி! கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் வரையான உணவு ‘பார்சல்’களை நான் மும்பைக்கு கொண்டு சென்றேன் தெரியுமா? மிக்க நன்றி உங்களுக்கு!’ என்றார்.

ஓர் அறிஞராகவும் சிந்தனையாளராகவும் எழுத்தாளராகவும் இருந்த நூரானி என்கிற அற்புத மனிதருக்கும், ஒரு தீவிர சமூக-அரசியல் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எனக்குமான நீண்டகால உறவு இப்படித்தான் சாதாரணமாகத் துவங்கியது. அந்த உறவு பெருமளவுக்கு தொழில் சார்ந்ததாக இருந்தபோதிலும், அவ்வப்போது தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்ததாகவும் மாறியதுண்டு. அவருக்கு பிடித்தமான மும்பையைத் தாண்டி, வேறு நகரங்களுக்கு செல்லும் போதெல்லாம், அவருக்குள் இருக்கும் உணவுப் பிரியர், எங்கு என்ன சாப்பிடுவது என்பதற்கான ஆலோசனையை என்னிடம் கேட்டுப் பெறுவார். அரசாங்கம், அரசியல், ஊடகத்துறை போன்றவற்றில் பெரும் ஆளுமைகளாக இருப்பவர்கள் மற்றும் அரசப் பிரதிநிதிகள் போன்றோரைப் பற்றி, புகழ்ச்சியாகவும், நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சி தருவதாகவும் இருக்கும் உண்மைகளை, நேரடி அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்.

நான் பணி ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன், எங்களின் தொழில்ரீதியான உறவு முடிவுக்கு வந்தது. பாபர் மசூதி வழக்கில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த அதிர்ச்சிகரமான தீர்ப்பைப் பற்றிய புத்தகத்தை அவர் முடிக்க விரும்பியதால், ஃப்ரண்ட்லைனுக்கு கட்டுரை எழுதுவதை பெரும்பாலும் நிறுத்திக் கொண்டார். அந்த நூலை, ஃபிரண்ட்லைனுக்கு சமர்ப்பிக்கவிருப்பதாக என்னிடம் பல முறை கூறியிருக்கிறார். அச்சமயம், அவர் சக்கர நாற்காலியில் இருந்தபடி ஓர் உதவியாளரை சார்ந்து இயங்க வேண்டிய சூழலில் இருந்தார். ஃப்ரண்ட்லைனுக்கான அவருடைய பங்களிப்பு குறைந்தது. எங்களின் தனிப்பட்ட உறவு, மும்பையில் தன் 93 வயதில் அவர் ஆகஸ்டு 29 அன்று இறந்த போது முடிவுக்கு வந்தது.

நூரனி மற்றும் அவரது புத்தகங்கள்

2 வாரங்களுக்கு ஒருமுறை, ஹைதராபாத் அச்சகத்துக்கு முந்தைய இதழ் அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குள், அவருடைய தொலைபேசி அழைப்பு வந்துவிடும். அதுவும் தரைவழித் தொலைபேசிதான் (landline). (2010களில் வேறு வழியே இன்றி செல்பேசி வாங்கும் வரை அவர் பயன்படுத்தியது தொலைபேசி தான்) அடுத்து வரவிருக்கும் இரண்டு அல்லது மூன்று ஃப்ரண்ட்லைன் இதழ்களுக்கான கட்டுரை பற்றி என்னிடம் பேசுவார். தன்னிடமுள்ள நாள்காட்டியில், அவற்றையும், எழுதிக் கொண்டிருக்கும் நூலிற்கான வேலைத் திட்டத்தையும் குறித்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு, அர்ப்பணிப்பும், திட்டமிட்ட செயல்முறையும் கொண்டவர். ஒவ்வொரு கட்டுரைக்கும் என்னுடைய அனுமதியை கேட்பார். நான் சற்றே சங்கடத்தோடு, “உங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. உங்களின் கட்டுரைகளை வாசிக்கவென்று மட்டுமே ஃப்ரண்ட்லைனுக்கு சந்தா கட்டும் வாசகர்கள் இருக்கின்றனர். என் அனுமதியை நீங்கள் கேட்க வேண்டியதில்லை,” என்பேன். ஆனால் அவர், “இல்லை நண்பரே. நீங்கள் தான் ஆசிரியர். ஒவ்வொரு முறையும் என் கட்டுரைக்கு உங்களின் அனுமதியை நான் பெறத்தான் வேண்டும்!” என்பார்.

ஃப்ரண்ட்லைனுக்கென முதன்முதலாக, அவர் 1990 ஏப்ரல் 28-மே 11 என்கிற தேதியிட்ட இதழுக்கு தான் எழுதினார். கட்டுரையின் தலைப்பு ‘Taming the RAW’. அந்நிய நாடுகளில் செயல்படும் இந்திய உளவுத் துறையான ‘ரா’ என்கிற அமைப்பை, அரசு அடக்கி வைக்க வேண்டுமென்கிற பொருள்பட எழுதப்பட்ட கட்டுரை அது. அவரிடமிருந்து வரவிருக்கும் கட்டுரைகளின் உள்ளடக்கமும் தொனியும் எப்படியிருக்கும் என்பதை முன் கூட்டியே அறிவிப்பது போலிருந்தது அக்கட்டுரை. அவரின் கடைசிப் பங்களிப்பு செப்டம்பர் 9, 2022 இதழில் ‘Judges and their bogus collegium’ என்ற தலைப்பில் பிரசுரமானது. அதாவது நீதிபதிகளைத் தேர்வு செய்யும் கொலீஜியம் அமைப்பை போலியானது எனச் சாடும் கட்டுரை அது. தன்னுடை 92 வயதில் அக்கட்டுரையை எழுதியிருந்தார். அதாவது, உடல்ரீதியான அசெளகரியங்கள் இருந்த நிலையிலும், அவரின் அளவற்ற அறிவும், அதிகாரத்தை எதிர்த்து உண்மை பேசும் உறுதியும் தளரவில்லை என்பதற்கான அடையாளமாக அது இருந்தது.

நூரனியின் புத்தகத் தொகுப்பு

1990க்கும் 2022க்கும் இடைப்பட்ட காலத்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுரைகள் அவரிடமிருந்து தவறாமல் வந்து கொண்டிருந்தன. 2002-ல் நான் பொறுப்பாசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு, சுமார் 500 இதழ்களைத் தயாரிக்கும் அனுபவம் எனக்கு இருந்தது. ஏறக்குறைய அந்த இதழ்கள் ஒவ்வொன்றிலும், அவருடைய கட்டுரைகள் தனியாகவும், முகப்புக் கட்டுரைகளாகவும் இடம் பெற்றிருந்தன.

இந்து நிறுவனத்தின் ஆவணக் காப்பகத்திலிருக்கும் நண்பர்களின் கணக்குப்படி, ஃபிரண்ட்லைனில் மட்டுமே அவர் மொத்தம் சுமார் 600 கட்டுரைகள் எழுதியிருக்கக் கூடும். ஏ.ஜி.நூரானியின் பெயரில் 1,000 பதிவுகள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்புகள், அடிக்குறிப்புகள், ஆசிரியருக்கான கடிதங்கள் என பல விஷயங்களில் அவருடைய பெயர் பதிவாகியிருக்கிறது.

தொடர்ச்சியாகவும், அதிகமாகவும், துணிச்சலாகவும், ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையிலும் தொடர்ந்து ஓர் எழுத்தாளர் எழுதியது ஓர் உலக சாதனை எனச் சொன்னாலும் அது மிகையல்ல. இந்தியச் சுதந்திரப் போராட்டம், காங்கிரஸ் கட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும், ஆர்.எஸ்.எஸ் ஆதரவில் பாரதிய ஜனதா கட்சி அடைந்த அரசியல் அதிகாரம், அந்த அதிகாரத்தை வைத்து ஆர்எஸ்எஸ் கண்ட எழுச்சி, இந்தியா தன் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகியவற்றுடன் கொண்டிருக்கும் பிரச்சினைக்குரிய உறவுகள், நீதித்துறையின் சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் மீதான விமர்சனங்கள், ஜம்மு காஷ்மீர், இந்தியா மட்டுமின்றி வல்லரசுகளின் அரசியல் சாசன வரலாறு, மனித உரிமைகள் என அவர் எழுதிய விஷயங்களை ஒரு கட்டுரையில் சொல்லி மாளாது.

நூரனியின் கட்டில்

இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் வரலாறு, சட்டம், சட்டமன்றக் குறிப்புகள் மற்றும் இலக்கியம், மகாத்மா காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோரின் எழுத்துகள் அடங்கிய தொகுப்புகள் போன்றவற்றின் உறுதியான ஆதாரங்களையும், இந்தியாவின் முன்னணி நூலகங்களில் செய்யப்பட்ட நெடிய ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும். 1950கள் தொடங்கி தனிப்பட்ட அளவில் அவர் சேகரித்து வைத்திருக்கும் செய்தித்தாள் துண்டுகள் எவராலும் மறுத்திட முடியாத முக்கியமான ஆதாரமாகும். இது தொடர்பாக அவர் கூறிய சுவாரஸ்யமான ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை உளவுத்துறையினர் அவரது ஈரறை வீட்டுக்கு வந்து, அதுவரை ‘ரகசியத்’ தகவலாக அதிகார மட்டங்களில் கருதப்பட்டு வந்த தகவல் ஒன்றை பற்றி கேட்க, அவர் ஒரு கோப்பை எடுத்து அதில் ஒரு செய்தித்தாள் கொண்டிருந்த அந்த ‘ரகசியத்’ தகவலை எடுத்துக் காட்டியிருக்கிறார். அவரின் எளிய வீடு ஒரு சிறு நூலகம் போல் இருக்கும். சமையலறையிலும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். புத்தகங்கள் மத்தியில்தான் அவர் வாழ்ந்தார்.

எங்களின் உரையாடல்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருடனான அவரின் அனுபவங்கள் இடம்பெறும். புத்தகங்கள், கட்டுரைகள் போன்றவற்றின் குறிப்பிட்ட பத்திகள் பற்றியும், சட்டம் மற்றும் அரசியல் சாசனப் பிரிவுகள் பற்றியும், வரலாற்றுப் பகுதிகள் பற்றியும், இன்னும் பலவற்றை பற்றியும் நாங்கள் பேசியிருக்கிறோம். அந்த உரையாடல்கள் யாவும், அவரது கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை போலச் செறிவானவை. எதிர்க்கட்சிகள் லக்னோவில் நடத்திய மாநாட்டை கண்ட பிறகு, அவர் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி பற்றி இப்படி சொன்னார்: “சாதுர்யமான பேச்சுக்கு அவரை அடித்துக் கொள்ள எவரும் கிடையாது.” ஓர் அரசியல் தலைவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவரை அறிமுகப்படுத்திய போது, அவர், “என் பெயர் நூரானி,” எனறதும், அவர், ‘எனக்கு தெரியும் சார். உங்களின் எழுத்துகளை தொடர்ந்து நான் ஃப்ரண்ட்லைனில் வாசித்து வருகிறேன்,’ எனக் கூறியிருக்கிறார்.

அனுபவமும் வயது அதிகம் கொண்ட அவரைப் போன்றோரை தொழிற்பூர்வமாக கையாளுவது சவால் நிறைந்த, கடினமான வேலையாகும். அன்றாடம் அவர், 3000-4000 வார்த்தைகள் நிறைந்த கட்டுரைகளை எழுதுவார். அவற்றை அவரது ‘ஆஸ்தான’ தட்டச்சாளருக்கு அனுப்ப, அவர் தட்டச்சு செய்து தரும் தாள்களை படித்துப் பார்த்து, திருத்தங்கள் செய்து, சரி செய்யப்பட்ட பிரதியை மும்பையின் இந்து நாளிதழ் அலுவலகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து அதை சென்னையின் ஃப்ரெண்ட்லைன் அலுவலகத்துக்கு ஃபேக்ஸ் செய்ய வைப்பார். மூலப் பிரதி, பிறகு, ‘ஆஃபிஸ் பாக்கெட்’டில் போடப்பட்டு சென்னை அலுவலகத்துக்கு அடுத்த நாள் அனுப்பப்படும். ஃபேக்ஸ் மூலம் கட்டுரை கிடைத்ததும், அதை தட்டச்சு செய்வோம். அந்தப் பிரதியை வாசித்து, தேவையென்றால் திருத்தங்கள் செய்வோம்.

இவை எல்லாமும் செய்தித்தாள் அலுவலகங்கள் கணிணிமயமாக்கப்பட்டு, இணைய வழியில் எழுத்துக்களை திருத்தும் பணி அறிமுகமான இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் நடந்து கொண்டிருந்தன. தட்டச்சு இயந்திரங்கள் வரலாறாகி விட்ட பின்பும், வரலாறை படைத்துக் கொண்டிருந்த நூரானி, தட்டச்சு இயந்திரங்களை கைவிட்டு விடவில்லை.

ஃப்ரண்ட்லைனில், எங்களின் பதிப்பு நேரத்தை குறைக்கும் வகையில், இந்து பதிப்பகக் குழுமத்தின் முதன்மை ஆசிரியரான என்.ராம், தனது நீண்டகால நண்பர் கஃபூருக்கு (நூரானி விரும்பிய பெயர் அதுதான்) கணிணி பரிசளிக்க விரும்புவதாகக் கூறினார். அவரின் சுருக்கெழுத்தாளர் 2011ஆம் ஆண்டு மத்தியில் கணிணிக்கு மாறிய பிறகும் கூட, நூரானி பேனாவையும் தாளையும் விடுவதாக இல்லை. எனினும், அவரின் கட்டுரைகளை பதிப்பிக்கும் சுமை, அவரது செறிவான, காட்டமான வெளிப்படையான கட்டுரைப் பிரதியை வாசிக்கும்போது மறைந்து விடும்.

சக்தி வாய்ந்த ஓரிரு வாக்கியங்களின் தன்மை குறித்து கேட்டறிய, நான் அவரைத் தொடர்பு கொள்ளும் போது, அவற்றுக்கு இணையான மூன்று அல்லது நான்கு மாற்று வாக்கியங்களை தருவார். அவரது எழுத்தின் முக்கியமான இன்னொரு அம்சம், செய்தித்தாள் கட்டுரையை மேற்கோள் காட்டுவதோடு, அவர் திருப்தி அடைந்துவிட மாட்டார். குறிப்பிட்ட அக்கட்டுரையை எழுதியவரின் பெயர் அல்லது செய்தியாளரின் பெயரை குறிப்பிடுவார். ’போட்டி’ செய்தித்தாள்கள் மற்றும் அதன் செய்தியாளர்களின் பெயரைக் குறிப்பிடாத ஒரு மலிவான இதழியல் நடைமுறைக்கு மாறான நடைமுறை நூரானியுடையது.

பொறாமைப்படத்தக்க அளவில் புத்தகங்களையும் ஆவணங்களையும் செய்தித்தாள் துண்டுகளையும் அவர் கொண்டிருந்தாலும், அவரது வீட்டுக்கு சென்றிருந்தபோது எனக்கு ஆச்சரியமளித்த விஷயம், long-form journalism என்கிற நீளமான கட்டுரை வகைகளையும், பல அரசியல்வாதிகளும், மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் மதிக்கத்தக்க பெரும் புத்தகங்களையும் எழுத அவர் பயன்படுத்திய எளிய ஈரடி உயரக் கட்டில்தான்.

அதிகார மையங்களை நோக்கி உண்மையை மட்டுமே நூரானி பேசினார். ஆனால் அதிகார மையங்கள், அவரது அறிவை அதிகம் பயன்படுத்தவில்லை. மாறாக, அவரது எழுத்துகளைக் கண்டு அஞ்சின. அரசை சாராமல் அறிவார்ந்து இயங்கும் Track II Diplomacy மட்டங்களில் அவர் பிரபலமானவர். வெளியுறவுக் கொள்கையை விமர்சிக்கும் துணிச்சல் மிகுந்தவராக மட்டுமில்லாமல், பிராந்திய அமைதியை பேச்சுவார்த்தைகள் மூலம் அடைவதற்கான ஆழமான யோசனைகளையும் வழங்கியவர்.

இது தொடர்பாக, Panos South Asia என்கிற அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஏ. எஸ். பன்னீர்செல்வன் இப்படிச் சொன்னார்:

“Himal Southasian பத்திரிகையுடன் Panos South Asia சேர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட முக்கியமான ஆளுமைகளுக்கான சந்திப்புகளை மே 2002ஆம் ஆண்டிலிருந்து ஒன்பது முறை நடத்தியிருக்கிறது. முதல் சந்திப்பு காத்மண்டு அருகே நடந்தது. இந்த நிகழ்வுகளில் மூத்த பத்திரிகையாளர்களும், இரு நாடுகளின் உறவு குறித்த ஆழமான அறிவு கொண்ட வல்லுநர்களும் கலந்து கொள்வார்கள். இவர்கள் அனைவரும், மாறி வரும் உலகச் சூழலில், புதுடெல்லியும் இஸ்லாமாபாத்தும் நல்லுறவு பேணுவது, தெற்காசியாவின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் முக்கியம் என்ற நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்.

“இரு நாடுகளையும் சேர்ந்த ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் முன்னணி செய்தி ஆசிரியர்கள் போன்றோரை வெளிப்படையாக உரையாடவும் தம் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் வரவழைத்தோம். அரசப் பிரதிநிதிகள் மற்றும் பல்துறை வல்லுநர்கள் அடுத்தக் கட்ட செயல்பாட்டுக்கான ஆலோசனைகளை வழங்க வந்திருந்த நிலையில், செறிவான பங்களிப்பு ஏ.ஜி. நூரானியிடமிருந்து வந்தது. செப்டம்பர் 2004ஆம் ஆண்டு இலங்கை பெண்டோடாவில் நடந்த நிகழ்வில், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையேயான பேச்சுவார்த்தை மற்றும் உறவு குறித்து அவர் பேசினார். இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவையும் பின்வரும் அடிப்படைகளை முன் வைத்துப் பேசினார்.

இந்தியாவுக்குள் இருக்கும் அரசியல் உறவுகள், வாக்கு வங்கிகள், பயங்கரவாத குழுக்கள், பொதுமக்கள் விருப்பம் மற்றும் தீவிரவாதம் போன்றவை பாகிஸ்தானுடனான உறவில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

பாகிஸ்தானுக்குள் இருக்கும் ராணுவத்தின் பங்கு, பயங்கரவாத குழுக்கள், அரசியல் காரணிகள், பொதுமக்கள் விருப்பம், பயங்கரவாதம் போன்றவை இந்தியாவுடனான அந்நாட்டின் உறவில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

பாகிஸ்தான் வழியிலான ‘அமெரிக்காவின் பங்கு’, மேற்குலகம் மற்றும் இஸ்லாமிய உலகின் தலையீடு, எரிபொருள் தேவை, சீனாவின் பங்கு போன்ற அந்நியக் காரணிகள் இரு நாட்டு உறவுகளில் செலுத்தும் ஆதிக்கம்.

இந்தியா வழியிலான ‘அமெரிக்காவின் பங்கு’, எரிபொருள் தேவை மற்றும் சீனாவின் பங்கு ஆகிய அந்நியக் காரணிகள் இரு நாட்டு உறவுகளில் செலுத்தும் ஆதிக்கம்.

இந்தப் பிராந்தியத்தில் நிலையான அமைதியும் வளர்ச்சியும் நீடிக்கும் வகையிலான இந்தோ – பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு தேவைப்படும் அறிவார்ந்த உரையாடலுக்கான நிரந்தரமான ஓர் இடத்தை வலியுறுத்துவதாக நூரானியின் வேண்டுகோள் இருந்தது.

நூரானியின் பார்வைகளோடு நீங்கள் முரண்படலாம். ஆனால் வரலாற்று ஆவணங்கள் மற்றும் சமகால ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட அவரின் ஆழமான கருத்துகளை நீங்கள் நிராகரித்து விட முடியாது. உதாரணமாக The Kashmir Dispute (Tulika Books, New Delhi, 2013) என்கிற இரு ஆய்வுத் தொகுதிகளை சொல்லலாம். முதல் தொகுதியைப் பற்றி பதிப்பாளர் விவரிக்கையில், நூரானி ‘ஒரு நீண்ட காலப் பிரச்சினையின் நுட்பமான வரலாற்றை இந்த நூலின் மூலம் கண்டறிகிறார். இந்திய ஒன்றியத்துடன் ஜம்மு காஷ்மீரை இணைப்பது குறித்து இருக்கும் அரசியல் அதிருப்தி மற்றும் எதிர்ப்பையும் பதிவு செய்கிறார்,’ என்கிறார். முதல் தொகுதியில் 153 பக்கங்களை பிரதான உள்ளடக்கமும் 134 பக்கங்களை சமகால மற்றும் வரலாற்று ஆவணங்களும் பிடித்திருக்கின்றன.

நூரனி எழுதிய புத்தகங்கள்

காஷ்மீர் பிரச்சினையுடனான பரிச்சயம் 1960களில் பம்பாய் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த காலத்திலேயே அவருக்குத் துவங்கி விட்டது. ஃப்ரண்டலைனின் சமீபத்திய இதழில், இஃப்திகார் கிலானி இது தொடர்பாக தன் கட்டுரையில் சிறு அளவில் பகிர்ந்திருக்கிறார்: “காங்கிரஸுக்குள் கலகம் செய்து கொண்டிருந்தவரும், பிரபல அறிவியலாளர் விக்ரம் சாராபாயின் சகோதரியுமான மிருதுளா சாராபாயின் அறிமுகத்திலிருந்துதான் காஷ்மீர் பிரச்சினை பற்றி தெரிந்து கொள்வதற்கான நூரானியின் ஈடுபாடு தொடங்கியது. ஷேக் அப்துல்லாவை (ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர்) தீவிரமாக ஆதரித்த அவர், அந்த காஷ்மீரத் தலைவரை காங்கிரஸ் கட்சி நடத்திய விதம் குறித்து பெரும் ஏமாற்றம் கொண்டார். அப்துல்லா மீண்டும் 1958ஆம் ஆண்டு காஷ்மீர் சதி விசாரணைக்காக கைது செய்யப்பட்டபோது, பாகிஸ்தான் சார்பாக ஒரு பிரிட்டிஷ் வழக்கறிஞர் வழக்கில் வாதாட முடிவெடுத்தார். ஆனால், இந்திய நீதிமன்றத்தில் வெளிநாட்டு வழக்கறிஞர் வாதாடக் கூடாது என புது டெல்லி திட்டவட்டமாகக் கூறிவிட்டது. அப்துல்லாவுக்காக வாதாடும் வழக்கறிஞர் குழுவில் ஒருவராக நூரானியை 1962ஆம் ஆண்டு தேர்வு செய்தார் சாராபாய். காஷ்மீர் அரசியலை தெரிந்து கொள்ள வாய்த்த இந்தத் தருணம் தான், நூரானியின் வாழ்க்கையின் முக்கியத் தருணமாக இருந்தது. ஜம்முவுக்கு முதன் முறையாக சென்று, சிறப்புச் சிறையில் அப்துல்லாவை சந்தித்த சம்பவத்தை அடிக்கடி குறிப்பிட்டு, அதுதான் காஷ்மீரோடு தன்னுடைய வாழ்நாள் பிணைப்பு உருவான தருணம் என விவரித்திருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குத்ச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்து அம்மாநிலத்தைத் துண்டாடிய மோடி அரசின் முடிவைக் கடுமையாக விமர்சித்து ஆகஸ்டு 10, 2019 என்கிற தேதியிட்ட ஃபிரண்ட்லைனில் அவர் எழுதிய கட்டுரையின் தலைப்பு: ‘படுகொலை செய்யப்பட்ட மனிதம்’. அதில், ‘அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370இல் செய்யப்பட்ட திருத்தம் அச்சட்டத்தின் கீழ் செல்லாது; இந்திய காஷ்மீர மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிரானது; காஷ்மீர் மக்களுக்கு இந்திய ஒன்றியத்துடன் இருந்த பிணைப்பை உடைக்கவல்லது,” என்று எழுதினார். மேலும், ‘அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட ஒன்று மட்டுமல்ல. இந்திய அரசாங்கமும், ஜம்மு-காஷ்மீர் அரசாங்கமும் ஐந்து நீண்ட மாதங்களுக்குப் பேச்சுவார்த்தை நடத்தி உருவாக்கிய ஒப்பந்தம் அது. அதனை 1954ஆம் ஆண்டு முதலே தகர்த்தவர்களை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.”

இந்தியா என்கிற கருத்தாக்கத்தை அழிக்க உறுதி கொண்டிருக்கும் தீய சக்தியை கூர்மையாக அம்பலப்படுத்திய மற்றுமொரு அற்புதமான படைப்பாக அவரது RSS: A Menace to India. (LeftWord Books, New Delhi, 2019) அமைந்தது. புத்தக அறிமுகவுரையில், எச்சரிக்கை மணியை அடிப்பதோடு மட்டுமின்றி, பெருமளவுக்கான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார் நூரானி. “1964ஆம் ஆண்டில் நேரு ‘குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவுக்கான ஆபத்து கம்யூனிசமாக இருக்காது; இந்து வலதுசாரி மதவாதமாகத்தான் இருக்கும்,’ என அதிகாரிகள் சந்திப்பு ஒன்றில் சொன்னதிலிருந்து, இந்த விஷம் பெரும் வேகத்தில் பரவியது. அதை பரப்பிய சக்திகள் வீழ்த்த முடியாதவை ஒன்றும் அல்ல. அதை எதிர்ப்பவர்கள், எல்லா மட்டங்களிலும் எழக் கூடிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராகவும் தயாரிப்போடும் இருக்கும் பட்சத்தில், நிச்சயமாக அதை வீழ்த்தி விட முடியும். பலரும் பொருட்படுத்தாத சித்தாந்த தளம் அதை எதிர்க்க முக்கியமாகத் தயார் செய்யப்பட வேண்டும். ‘போர்ப் பறை உறுதியின்றி ஒலித்தால், யார் போராட முன்வருவார்?’ இந்தியக் கனவு மட்டுமின்றி, இந்தியாவின் ஆன்மாவும் அழிக்கப்பட்டு விடும்.”

ஏஜி நூரனியுடன் ஆர் விஜயசங்கர்

ஆனால் நூரானியின் போர்ப்பறை உறுதியற்று ஒலிக்கவில்லை. சத்தமாகவும் தெளிவாகவும் ஒலிப்பது அது. போருக்கு தயாராக இருப்பவர்களுக்கான சித்தாந்த ஆயுதமாகவும் பயன்பட வல்லது.

இந்த அறிவார்ந்த பணியில் 100 பக்கம் வரையிலான 16 பின் இணைப்புகள் இருக்கின்றன. புத்தக தயாரிப்புக்காக எழுத்தின் அளவு குறைக்கப்படாமல் இருந்திருந்தால், இப்பகுதி இன்னும் பெரிதாகி இருந்திருக்கும்.

இப்புத்தகத்தை தமிழுக்கு (820 பக்கங்கள்) மொழிபெயர்க்கும் நல்வாய்ப்பு எனக்கு வாய்த்தது. என் மொழிபெயர்ப்பு பணி பற்றி நூரானியிடம் நான் சொன்ன போதெல்லாம், தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் அவர், “நண்பரே, உங்களின் மொழிபெயர்ப்பு என்னுடைய ஆங்கில மூலப்பிரதியை விட நிச்சயம் நன்றாக இருக்கும்!” என்பார்.

அவர் பெரும் ஆர்வம் கொண்டு விரிவாக ஆய்வு செய்த பல்வேறு தலைப்புகளை எடுத்துக் காட்டும் வகையிலான புத்தகப் பட்டியல்:

பாபர் மசூதி இடிப்பு குறித்து ஏற்கெனவே அவர் ஒரு நூலை எழுதியிருந்தார். அது தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினைக் கண்டித்து, அவர் எழுதிய கட்டுரையைப் போல ஒன்றினை வேறு யாரும் எழுதிவிட முடியுமா என்பது சந்தேகமே. தீர்ப்பு வெளியானதுமே, அதன் நகலை ஃபேக்ஸ் மூல்ம அவருக்கு அனுப்பி வைத்தோம். நான்கே நாட்களுக்குள் அவருடைய கட்டுரை வந்து சேர்ந்து விட்டது. ஆகஸ்டு 30, 2029 தேதியிட்ட ஃபிரண்ட்லைனில் அவர் எழுதிய கட்டுரையின் தலைப்பு: ‘உச்சநீதி மன்றம் நீதியை மறுக்கிறது’. அதில் அவர் எழுப்பிய மையமான கேள்வி இதுதான்: ‘எந்த ஒரு சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தையும் கட்ட வேண்டுமென உத்தரவிட ஒரு மதச்சார்பற்ற நாட்டிலிருக்கும் உச்சநீதி அமைப்புக்கு என்ன உரிமை, அதிகாரம், ஆளுகை எல்லை இருக்கிறது? இப்படிச் செய்ததன் மூலம், உச்சநீதி மன்றம் சொத்துரிமை தொடர்பான ஒரு குடிமை வழக்கில் முடிவெடுப்பதையும் தாண்டிச் சென்று, மத மோதல் என்கிற பிரதேசத்திற்குள் இறங்கி, தன் புகழுக்கே ஒரு களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டது.”

பாபர் மசூதி இடிப்பு

எவ்வளவு துணிச்சலான வரிகள் இவை! ஆனால் நீதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள், ராணுவத் தளபதிகள், இந்தியாவின் அயல்நாட்டுத் தூதர்கள் போன்றோரை இப்படிக் கடுமையான, முகத்திலறையும் விமர்சனங்களை எதிர்த்து, அவர்கள் யாரும் அவதூறு வழக்கையோ, நீதிமன்ற அவமதிப்பு வழக்கையோ, சட்டமன்ற, பாராளுமன்ற உரிமைப் பிரச்சினையையோ அவருக்கு எதிராக எழுப்பத் துணியவில்லை. ஏனெனில், உண்மை அவர் பக்கம் இருந்தது.

நூரானி பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அவரது பேராளுமை கொண்ட பன்முகத்தன்மையை சரியாக எடுத்துக் காட்ட, அவரின் வாழ்க்கை வரலாறு விரிவாக எழுதப்பட்டால் மட்டும்தான் முடியும்.

அவருடனான என் உறவு முழுமையுற்று விட்டது. அதை முழுமை பெறச் செய்தது உணவுதான். மும்பைக்கு நான் வரும் போது ‘அவருடைய’ ஜிம்கானா க்ளப்’புக்கு அழைத்துச் செல்வதாக சொல்வார். அந்த வாக்குறுதியை 2021ஆம் ஆண்டில் நான் அங்கு சென்றபோது அவர் நிறைவேற்றினார். அது ஒரு நீண்ட நேர மதிய உணவு சந்திப்பாக இருந்தது. காரைக்குடி உணவகம் பற்றி நாங்கள் பேசிய முதல் உரையாடலை அவர் நினைவுகூர்ந்தார். அதுவே எங்களின் கடைசி சந்திப்பாக மாறுமென நான் அப்போது நினைத்திருக்கவில்லை.

Tags :
ag nooraniIndiaLawyerPolitical Commentator
Advertisement
Next Article