தேர்வை அறிவித்துவிட்டு மறந்துபோன பல்கலைக்கழகம் - அதிர்ச்சியில் மாணவர்கள்!
மத்தியப் பிரதேசத்தில் தேர்வு அட்டவணையை வெளியிட்ட பல்கலைக்கழகம் தேர்வு நடத்த மறந்த சம்பவம் மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் ராணி துர்காவதி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் M.Sc.,(CS) பிரிவினருக்கு மார்ச் 5-ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் தேர்வுக்காக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தயாராகியுள்ளனர்.
இதனிடையே, நேற்று (மார்ச் 5) தேர்வு எழுதுவதற்காக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் வந்தபோது, அந்த அதிர்ச்சியூட்டும் ஒரு தகவல் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. அதாவது, தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி இருந்த போதும், தேர்வு அறிவிக்கப்பட்டதையே பேராசிரியர்கள் மறந்துவிட்டதால், தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்தல் உள்ளிட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தால் மறக்கப்பட்ட தேர்வு மார்ச் 7 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என தீபேஸ் மிஸ்ரா அறிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பல்கலைக்கழக மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.