திருமணமான பெண் மீதான ஆசையால் சிக்கன் ரைஸில் விஷம் கலந்த விவகாரம் - தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி!
நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியானதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாயாரும் உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் ஜீவானந்தம்(32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ம் தேதி நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார். மேலும் சிக்கன் ரைஸ் வாங்கி கொண்டு தனது தாயார் நதியாவிற்கும் (40), தேவராயபுரத்தில் வசித்துவரும் தாத்தா சண்முகநாதனுக்கும் (67) கொடுத்துள்ளார்.
இதனிடையே நதியா, சண்முகநாதன் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவனைக்கு 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி வந்தனர். எனவே அவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் பிரச்னை ஏற்பட்டு இருக்க வாய்ப்பு குறைவு எனவும், சாப்பாட்டில் விஷம் கலந்திருக்கலாம் எனவும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று (மே. 3) தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தாய் நதியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உணவு மாதிரியின் பகுப்பாய்வு முடிவில் உணவில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பது உறுதியானது. இதனையடுத்து போலீசாரின் பார்வை கல்லூரி மாணவர் பகவதியிடம் திரும்பியது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இந்த சம்பவம் தொடர்பாக பகவதி அளித்த வாக்குமூலத்தில், தனது கல்லூரியில் உடன் பயிலும் மாணவி ஒருவரை காதலித்ததாக தெரியவந்தது. மேலும், திருமணமான பெண்ணுடன் இருந்த உறவு தாய் மற்றும் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால், அவர்கள் தொடர்ந்து கண்டித்து வந்ததாக கூறினார். மேலும் கல்லூரி நேரம் போக பகுதி நேரமாக இண்டர்நெட் சென்டர் ஒன்றில் வேலைக்கு செல்ல வலியுறுத்தியுள்ளார் தாய்.
எனவே, தனது தாய் நதியா மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் அப்போது, ஏற்கனவே நாமக்கல்லில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர், சிக்கன் சவர்மா சாப்பிட்டு குழந்தை உயிரிழந்ததை நியாபகம் வந்துள்ளது. அந்த பாணியில், சென்றால் போலீசாருக்கு தனது மீது சந்தேகம் வராது என எண்ணிய பகவதி, உணவில் நஞ்சு கலக்க திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக கடந்த மாதம் 27-ம் தேதி பரமத்தி சாலையில் உள்ள உரக்கடைக்கு சென்று அந்த மருந்தை வாங்கியுள்ளார்.
தாய் நதியா அந்த சிக்கன் ரைஸ் பாதியை சாப்பிட்டு, அதில் சந்தேகம் எழுந்ததையடுத்து, உடனடியாக தனது மாமனாரான சண்முகநாதனை சாப்பிட வேண்டாம் எனக்கூற செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே முதியவர் சண்முகநாதன் அதனை முழுவதும் சாப்பிட, நதியாவின் மற்றொரு மகன் சிறிது மட்டுமே அந்த உணவை சாப்பிட உடனடியாக அந்த உணவை துப்பிவிட்டார். சிறிது நேரத்தில், சண்முகநாதன் மற்றும் நதியா இருவருக்கும் வாயில் நுரை தள்ளியதால் உடனடியாக அரசு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் முதியவர் சண்முகநாதன் உயிரிழந்தார் என பகவதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
முதலில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறி உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது சிக்கன் ரைஸ் விவகாரம் கொலை வழக்காக போலீசார் மாற்றியுள்ளனர். காதல் விவகாரத்தை கண்டித்ததால் பெற்ற தாய், சகோதரர், தாத்தா என பாராமல் கல்லூரி மாணவன் ஒருவர் குடும்பத்தையே கொலை செய்ய துணிந்த விவகாரம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.