அட்யா பட்யா - தங்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!
இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டான அட்யா பட்யா ஆசிய சாம்பியன்ஷிப்
போட்டியில் தங்க பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல்
31ஆம் தேதி வரை ஆசிய அளவிளான முதலாவது அட்யா பட்யா சாம்பியன்ஷிப் போட்டி
நடைபெற்றது. இதில் நேபாளம், ஆப்கானிஸ்தான், பூட்டான், வங்கதேசம், இந்தியா,
மியான்மர், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த
வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற தமிழ்நாடு வீரர் முகமது ரிஸ்வான் மற்றும்
வீராங்கனைகள் பிரியதர்ஷினி, ஸ்ரீமதி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று சாதனை
படைத்தனர். இதையடுத்து பதக்கங்கள் வென்ற வீராங்கனைகள் சென்னை திரும்பினர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க பதக்கம் வென்ற பிரியதர்ஷினி கூறியதாவது:
ஆசிய அளவில் நடந்த முதல் அட்யா, பட்யா சேம்பியன்ஷிப் போட்டி இது. இதில்
இந்தியா சார்பில் நாங்கள் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றது மிகவும்
பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இதேபோன்று பயிற்சிகள் எடுத்து
அடுத்தடுத்த போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அதேபோல் எங்களுக்கு விளையாடுவதற்கு மைதானங்கள் இல்லை. அதை தமிழ்நாடு அரசு அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். பெண்களும் அதிக அளவில் இந்த விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.
அட்யா, பட்யா விளையாட்டு தமிழ்நாட்டு அசோசியேஷன் பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியன் கூறியதாவது:
“அட்யா, பட்யா விளையாட்டு இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டாகும். இதை தமிழ்நாட்டில் கிளி தட்டு என பெயரிட்டு சோழர் காலத்தில் இருந்து விளையாடினார்கள். இந்தப் போட்டி கபடி மற்றும் கோகோ போன்று எந்த ஒரு உபகரணங்களும் பயன்படுத்தாமல் விளையாடக்கூடிய போட்டி. இந்த விளையாடில் தமிழ்நாடு 1996 ஆம் ஆண்டு முதல் பங்கேற்று விளையாடி வருகிறது. விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து இந்த போட்டி குறித்து கூறியுள்ளோம். நிச்சயமாக உதவிகள் செய்கிறேன் என
தெரிவித்துள்ளார். இந்த விளையாட்டு மூலமாக ஏற்கனவே 10 பேருக்கு அரசு துறையில்
வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.