Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மருத்துவ அறிவில்லாமல் ஆலோசனை, சிறையில் அடைக்க சொன்ன மருத்துவர் - சமந்தா விளக்கம்!

04:33 PM Jul 05, 2024 IST | Web Editor
Advertisement

தவறான மருத்துவ முறையை பரிந்துரைத்த நடிகை சமந்தா சிறையில் தள்ளப்பட வேண்டும் என பிரபல மருத்துவர் பதிவிட்ட நிலையில், சமந்தா தனது விளக்கத்தினை பதிவிட்டுள்ளார்.

Advertisement

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி பாதிப்பில் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறார். சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்து தன் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திவரும் சமந்தா, தனது யூடியூப் சேனலில் உடல் மற்றும் மன நலன் குறித்த பாட்காஸ்ட் வீடியோக்களை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் வைரஸ் பாதிப்புகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைட் நெபுலைசேஷன் (Hydrogen Peroxide Nebulisation) எனும் சிகிச்சையை பயன்படுத்துவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் கல்லீரல் நிபுணரும் பிரபல மருத்துவருமான பிலிப்ஸ் என்பவர் நடிகை சமந்தாவை கடுமையாக சாடி, தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் கூறியதாவது,

“நடிகை சமந்தா ஆரோக்கியம் பற்றிய மருத்துவ அறிவற்றவர். பகுத்தறிவு மற்றும் விஞ்ஞானரீதியாக முற்போக்கான இந்த சமூகத்தில், ஆபத்து விளைவிக்கிறார். இதுபோன்ற சமூகத்தில் சமந்தாவுக்கு அபராதம் விதிக்க வேண்டும் அல்லது அவரை சிறையில் அடைக்க வேண்டும் அல்லது அவருக்கு நல்ல ஆலோசகர் தேவை. இந்தியாவின் சுகாதார அமைச்சகம் அல்லது ஏதேனும் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு, இந்த சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுமா, அல்லது முதுகெலும்பில்லாமல் இருந்து மக்களை சாக அனுமதிக்குமா?” எனக் கடுமையாக சாடி இருந்தார்.

இந்நிலையில் தன்னை சாடிய மருத்துவரைக் குறிப்பிட்டு சமந்தா நீண்ட விளக்கப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பல்வேறு வகையான மருந்துகளை எடுக்க வேண்டியிருந்தது. நான் என்னிடம் அறிவுறுத்தப்பட்ட அனைத்து சிகிச்சை முறைகளையும் முயற்சித்தேன். மிகுந்த தகுதியான நிபுணர்களால் இந்த மருந்துகள் அறிவுறுத்தப்பட்டு, பலவற்றை நானாகவே ஆய்வு செய்த பிறகு, என்னைப் போன்ற ஒரு சாதாரண நபருக்கு இவையெல்லாம் சாத்தியமாகி உள்ளது.

இந்த சிகிச்சைகள் பலவும் மிகவும் விலை உயர்ந்தவை. நான் இவற்றுக்கெல்லாம் செலவு செய்ய முடிவதால், நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை எப்போதும் நினைத்துக் கொள்வேன். இவற்றை செய்ய முடியாதவர்களை எண்ணி வருந்துவேன். ஆனால் இந்த வழக்கமான சிகிச்சைகள் நீண்ட காலத்துக்கு எனக்கு சிறப்பாக செய்யவில்லை. இந்த சிகிச்சை முறை எனக்கு வேலை செய்யாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்ய வாய்ப்புள்ளது என்று நான் நம்புகிறேன்.

இந்த இரண்டு காரணிகளும் என்னை மாற்று சிகிச்சை முறைகள் பற்றி படிக்க வழிவகுத்தன. மேலும் பல சோதனை முயற்சிகள், தோல்விகளுக்குப் பிறகு, என் உடலுக்கு நன்றாக வேலை செய்யும் சிகிச்சை முறையை நான் கண்டறிந்தேன். இந்த பாரம்பரிய மருத்துவத்துக்கான செலவு, நான் ஏற்கெனவே செலவு செய்த வழக்கமான மருத்துவ செலவை விடக்குறைவு.

ஒரு சிகிச்சை முறையை வலியுறுத்தி பரிந்துரை செய்யும் அளவுக்கு நான் விவரம் தெரியாத நபர் இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் நான் எதிர்கொண்ட பல சம்பவங்களின் காரணமாக நல்ல எண்ணத்துடன் இவற்றை பரிந்துரைக்கிறேன். குறிப்பாக பணம் இல்லாத பலரால் இந்த சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாமல் போய் இருக்கும். இறுதியாக நாம் அனைவரும் நம்மை வழிநடத்த, படித்த மருத்துவர்களை தான் நம்பி இருக்கிறோம். இந்த சிகிச்சை ஒரு எம்.டி.யாக இருக்கும் உயர் தகுதி வாய்ந்த மருத்துவரால் தான் எனக்கு பரிந்துரைக்கப்பட்டது.

டிஆர்டிஓவில் அவர் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தனது அனைத்து கல்வி மற்றும் மருத்துவப் பணிகளுக்குப் பிறகு எனக்கு மாற்று மருத்துவத்தை அவர் பரிந்துரைத்தார். ஆனால், டாக்டர் பிலிப்ஸ் என்னை கடுமையான வார்த்தைகள் மூலம் தாக்கியுள்ளார். அவர் மருத்துவர் என்பதிலும், என்னை விட அவருக்கு அதிகம் தெரியும் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை. மேலும் அவருடைய நோக்கம் சரியானது என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அவர் வார்த்தைகளை பார்த்து பயன்படுத்தி இருக்கலாம்.

குறிப்பாக அவர் என்னை சிறையில் தள்ள வேண்டும் எனப் பேசியது மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் இருந்தது. பரவாயில்லை, நான் செலிப்ரிட்டியாக இதைப் பதிவிடவில்லை. ஒரு சிகிச்சை கோரும் நபராகவே பதிவிட்டேன். இப்படி செய்வதன் மூலம் எனக்கு பணம் எதுவும் கிடைக்கப்போவதில்லை. நான் யாரையும் அங்கீகரிக்கவில்லை.  வழக்கமான மருத்துவ முறை வேலை செய்யாதவர்களுக்கு, மலிவு விலையில் இருக்கும் இந்த சிகிச்சையை நான் பரிந்துரைத்தேன், அவ்வளவு தான்.

மருந்துகள் வேலை செய்யாதபோது நாம் முயற்சியை கைவிடக் கூடாது. நான் நிச்சயமாக
கைவிடத் தயாராக இல்லை. அந்த ஜென்டில்மேன் டாக்டர் பற்றிய தலைப்புக்கு மீண்டும் வருவோம். என்னை அட்டாக் செய்வதற்கு பதிலாக, நான் என் பதிவில் குறிப்பிட்டிருந்த என்னுடைய டாக்டரை அவர் பணிவுடன் அழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இரண்டு உயர் தகுதி வாய்ந்த நிபுணர்களிடையே நடைபெறும் விவாதத்தில் இருந்து நானும் ஏதாவது கற்றுக்கொண்டிருப்பேன்.

மற்றவர்களுக்கு உதவுவது மட்டுமே என் நோக்கம். நான் அதில் கவனமாக இருக்கிறேன். யாருக்கும் தீங்கு செய்வதை நான் விரும்பவில்லை. ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபஞ்சர் மருத்துவம், திபெத்திய மருத்துவம், பிரானிக் ஹீலிங் போன்ற மருத்துவ முறைகளை என் பல நல்ல நண்பர்கள் எனக்கு பரிந்துரை செய்துள்ளார்கள். நான் அனைத்தையும் கேட்டு, எனக்கு வேலை செய்த ஒன்றைப் பகிர்கிறேன். ஒவ்வொரு சிகிச்சை முறையிலும் உயர் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். எதிர்கருத்து உடையவர்களும் இருக்கிறார்கள். இரண்டு பக்கமும் உறுதியான நம்பிக்கை உடையவர்கள் மற்றும் எதிர்க்கருத்து உடையவர்கள் இருக்கிறார்கள். இவற்றுக்கு மத்தியில் சரியான உதவியை கண்டுபிடிப்பது கடினமான ஒரு விஷயமாக உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

Tags :
DoctorLiver DocMayositisNews7Tamilnews7TamilUpdatessamanthaSamantha Ruthprabhutreatment
Advertisement
Next Article