“அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பது ஏழை குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்” - சிபிஐ (எம்)!
“அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக்கொடுக்க முனைவது தமிழ்நாட்டின் ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்” என சிபிஐ (எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்கும் முயற்சி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதன் நோக்கம் படிப்படியாக அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும். அரசுப் பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்புநிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் ஏறக்குறைய 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் அரசுப்பள்ளிகளில் 24310 தொடக்கப்பள்ளிகள், 7024 நடுநிலைப்பள்ளிகள், 3135 உயர்நிலைப்பள்ளிகள், 3110 மேல்நிலைப்பள்ளிகள் என 37579 பள்ளிகள் இயங்குகின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 8328 செயல்படுகின்றன. இதில் 46 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் குறைந்த அளவு இயங்கும் 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் ஏறக்குறைய 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளின் மூன்றில் ஒரு பங்கு கூட செயல்படாத தனியார் பள்ளிகள் தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 2500 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் கூட இல்லையென்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆரம்பப் பள்ளிகளின் இடைநிற்றல் 16 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தி கல்வித் தரத்தை மேம்படுத்தப்படுவதற்கு பதிலாக, அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக்கொடுக்க முனைவது தமிழ்நாட்டின் ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயலாகும்.
பல தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளே கிடையாது. கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழ்நாடு அரசு தப்பிப்பது, நிதி சுமையை காரணம் காட்டி தனியாருக்கு தத்துக்கொடுப்பது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும்.
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துகொடுக்கும் நடவடிக்கையினை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.