சூரியனைப் படம்பிடித்த ஆதித்யா ‘எல்-1' விண்கலம்!
ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சூரியனின் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் மாதம் ஆந்திரவின் ஸ்ரீஹரிகோட்டாவில் தீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
ஆதித்யா-எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 29-ம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அண்மையில் ஆதித்யா விண்கலத்தின் 2-ஆவது ஆய்வுக் கருவி செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில் ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. ஆதித்யா விண்கலத்தில் உள்ள புறஊதா கதிர் மூலம் இயங்கும் தொலைநோக்கி இந்த புகைப்படங்களை எடுத்துள்ளன. அதில், சூரியனை சுற்றியுள்ள குரோமோஸ்பியர் மண்டலத்தை வெவ்வேறு அலைநீளத்தில் படம்பிடித்துள்ளது.