நெருங்கும் தீபாவளி பண்டிகை; சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 1,850 சிறப்பு பேருந்துகள் -அமைச்சர் சிவசங்கா்
தீபாவளி பண்டிகையொட்டி, சென்னையிலிருந்து கூடுதலாக 1,850 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களில் வேலை செய்யும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இதனால், பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி சென்று வர சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவிக்கும்.
அந்தவகையில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9 ஆம் தேதி முதல் இயக்கப்படும். தமிழகம் முழுவதும் மொத்தம் 16895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதில் சென்னையில் இருந்து இயக்கப்படும் 6,300 வழக்கமான பேருந்துகளுடன், கூடுதலாக 4,675 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10,975 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக நவம்பர் 13 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இதற்காக சென்னையில் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், கே.கே.நகர், மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். மேலும், நகரின் முக்கியப் பேருந்து நிலையங்களிலிருந்து தற்காலிக பேருந்து நிறுத்தங்களுக்கு செல்லும் வகையில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்நிலையில், விழுப்புரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகத்தின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை காலை திடீா் ஆய்வு மேற்கொண்ட அவா் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்தாண்டு சென்னையிலிருந்து பிற ஊா்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும் கூடுதலாக 1,612 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தீபாவளி பண்டிகை முடிந்து, பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக கூடுதலாக 740 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
கூடுதல் 1,850 சிறப்புப் பேருந்துகள்: கடந்தாண்டை விட நிகழாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதலாக பொதுமக்கள் பயணிப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், சென்னையிலிருந்து பிற ஊா்களுக்கு கூடுதலாக 1,850 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் அவரவா் ஊா்களிலிருந்து சென்னைக்கு வர ஏதுவாக கூடுதலாக 900 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும், நவம்பா் 9-ஆம் தேதி 550 பேருந்துகளும், 10-ஆம் தேதி 600 பேருந்துகளும், 11-ஆம் தேதி 700 பேருந்துகளும் என மொத்தமாக 1850 சிறப்புப் பேருந்துகள் சென்னையிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்படும்.
தீபாவளி பண்டிகை முடிந்து பல்வேறு ஊா்களிலிருந்து பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக நவம்பா் 13-ஆம் தேதி 250 பேருந்துகளும், 14-ஆம் தேதி 300 பேருந்துகளும், 15-ஆம் தேதி 350 பேருந்துகளும் என மொத்தமாக 900 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.
இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்க நாள்களில் இரவு, பகல் என தொடா்ச்சியாக பேருந்து நிலையங்களில் போதிய அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், பணியாளா்களை நியமிக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பேரருந்துகளின் புறப்பாடுகளை அறிந்து கொள்ள ஏதுவாக ‘மெகா போன்’ மூலம் அறிவிப்பு செய்யப்படும்.
ஊா்களுக்குள் செல்ல நடவடிக்கை: புறவழிச் சாலைகளிலும், முக்கிய பேருந்து நிறுத்தங்களிலும் போதிய பணியாளா்களை நியமித்து, அனைத்துப் பேருந்துகளும் அனைத்து ஊா்களுக்குள்ளும் சென்று, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையைத் தொடா்ந்து, திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது. கடந்தாண்டு அனைத்துப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் திருவண்ணாமலையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு ஊா்களுக்கு 6,634 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நிகழாண்டில் பக்தா்கள் நலன் கருதி 6,832 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் சா.சி.சிவசங்கா்.