"#OnlineGaming-க்கு அடிமையாதலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்" - சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம்!
ஆன்லைன் கேமிங் விளையாட்டுகளுக்கு அடிமையாதலும் அதனால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் எனும் தலைப்பில் Tamil Nadu Online Gaming Authority விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது.
ஆன்லைன் கேமிங் துறை குறிப்பிடத்தக்க வேகத்தில் வளர்ந்து வரும் ஒரு துறையாகும். கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 450 மில்லியனுக்கும் அதிகமான கேமர்கள் மற்றும் சுமார் 430 மில்லியன் மொபைல் கேம் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆன்லைன் கேமிங்கிற்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. ஆன்லைன் கேமிங்கில் லூடோ மற்றும் கேண்டி க்ரஷ் போன்ற சாதாரண கேம்கள் முதல் ரம்மி போக்கர் போன்ற சூதாட்ட கேமிங் மற்றும் BGMI, ஃப்ரீ ஃபயர் மற்றும் கால் ஆஃப் டூட்டி போன்ற வீடியோ கேம்கள் வரை பல்வேறு கேம்கள் உள்ளன.
இன்றைய இளைய சமுதாயத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் பொழுது போக்காக ஆன்லைன் விளையாட்டுகள் இருந்தன. காலப்போக்கில் அதற்கு அடிமையாகி பணத்தை இழந்து அதன் விளைவாக உயிரை மாய்த்துக் கொள்ளும் அவல நிலை பல இடங்களில் ஏற்பட்டது.
ஆன்லைன் சூதாட்டத்திற்காக கடன் வாங்கி விளையாடி அதனால் பணத்தை இழந்து நிறைய மக்கள் உயிரை மாய்த்துக் கொண்ட துயர சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றன. இதனைக் கவனத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்யும் விதமாக சட்டம் இயற்றியது. ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்த முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
இந்த நிலையில் Tamil Nadu Online Gaming Authority சார்பில் ”ஆன்லைன் கேமிங் விளையாட்டுகளுக்கு அடிமையாதலும் அதனால் மாணவர்கள் எதிர்கொள்ளும் எதிர்மறையான விளைவுகள்” எனும் தலைப்பில் சென்னை எம்.ஆர்.சி நகரில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆன்லைன் கேம் ஒழுங்கு ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான நசீமுதீன் , சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பேசியதாவது..
“தற்போது மொபைல் போன் மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவிட் பெருந்தொற்றிற்கு பிறகு இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இணையதளத்தின் வருகை ஒரு வகையில் பயனை தந்தாலும் ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல பெரும் அபாயத்தை சமூகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் பலர் தற்போது ஆன்லைன் கேமிங் வழியாக சூதாட்டத்தில் ஈடுபட்டு அதற்கு அடிமையாகி வருகின்றனர்.
ஆன்லைன் கேமிங் என்பது சமூகத்தில் சுனாமியை போல பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் ஒரு இளைஞன் ஆன்லைன் கேமிங் விளையாட பணம் இல்லை என்பதால் தனது தாயை கொன்றுவிட்டு அதன்மூலம் கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்தில் கேம் விளையாடலாம் என கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ” என தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆன்லைன் கேம் ஒழுங்கு ஆணையத்தின் தலைவர் நசிமுதீன் பேசியதாவது..
நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆன்லைன் கேமால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதற்கு அடிமையாகும் பழக்கம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை தமிழ்நாடு ஆன்லை கேமிங் ஒழுங்கு ஆணையம் ஏற்படுத்தி வருகிறது. ஆன்லைன் கேமிங்கால் ஏற்படும் விளைவுகளை இந்த ஒழுங்கு ஆணையம் விரிவான கள ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு கிட்டதட்ட 2லட்சம் மாணவர்களிடம் இருந்து நேரடியாக தகவல்களை பெற்று தரவுகளை சேகரித்துள்ளோம். இந்த ஆய்வறிக்கையை இன்னும் சில மாதங்களில் வெளியிட உள்ளோம். இந்த அறிக்கை முக்கியத் தரவுகள் அடங்கிய ஒரு விரிவான மற்றும் பயனுள்ள அறிக்கையாக இருக்கும்” என நிசாமுதீன் தெரிவித்தார்.
இதன்பின்னர் ஆன்லைன் கேமிங் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்திய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் பேசியதாவது..
“ ஆன்லைன் கேமிங்கால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு தான் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் தமிழ்நாடு அரசுதான் அதற்கு எதிராக தடை சட்டம் இயற்றியது. கோவிட் பெருந்தொற்றிற்கு பிறகுதான் ஆன்லைன் கேமிங் மற்றும் அதன் பயன்பாடு கனிசமான அளவு உயர்ந்தது. இதன் மூலம் பயனர்களுக்கு உளவியல் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
மாணவர்களை நிஜ உலகத்தில் இருந்து விடுத்து நிழல் உலகத்திற்கு அது தள்ளிவிடுகிறது. உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கும் ஆன்லைன் கேமிங் உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான பல்வேறு நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. எனவே மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயம் புதிய தொழில்நுட்பங்களை நல்ல முறையில் கையாண்டு நமது நாட்டையும் நமது மாநிலத்தையும் முன்னேற்றும் பாதையில் துணை நிற்க வேண்டும். ஆன்லைன் கேமிங் விழுப்புணர்வு முகாமை நடத்திய தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஒழுங்கு ஆணையத்தின் செயல் பாராட்டத்தக்கது” என தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.