‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை பாராட்டிய நடிகர் யாஷ்!
கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘காந்தாரா’. இதன் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் முன்கதையாக ‘காந்தாரா சாப்டர் 1’ உருவானது. இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவான இந்த படம், புராணங்களால் நிரம்பிய கதைக்களத்தில், கண்கவர் காட்சியமைப்புகளுடன், பார்வையாளர்களை தெய்வீகமும் சக்தியும் நிறைந்த பண்டைய உலகத்துக்குக் கொண்டு செல்லும் படைப்பாக உருவாகியுள்ளது.
ரிஷப் ஷெட்டி இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவாளராக அரவிந்த் S காஷ்யப் பணியாற்றியுள்ளார். B.அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நேற்று (அக்.2) திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தை நடிகர் யாஷ் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது,
"காந்தாரா சாப்டர்-1 திரைப்படம் கன்னட சினிமாவிற்கும், இந்திய சினிமாவிற்கும் ஒரு புதிய பெஞ்ச்மார்க்கை உருவாக்கித் தந்திருக்கிறது. உங்கள் நம்பிக்கை, அர்ப்பணிப்பு எல்லாம் ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. எழுத்தாளராகவும், இயக்குநராகவும், நடிகராகவும், உங்களுடைய விஷன் திரையில் ஒரு ஆழ்ந்த அனுபவத்தை எங்களுக்குக் கொடுத்திருக்கிறது.
தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே இப்படத்திற்குக் கொடுத்த ஆதரவு திரைப்படத் துறையின் தரத்தைக் கூடுதலாக உயர்த்தி இருக்கிறது. ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவையா, ஜெயராம், பிரமோத் ஷெட்டி, பிரகாஷ் துமினட், ராகேஷ் பூஜாரி ஆகியோரின் நடிப்பு பாராட்டுக்குரியது. 'காந்தாரா சாப்டர்-1' படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒருவித அசத்தலான, அபூர்வமான சினிமாவை உருவாக்கியுள்ளீர்கள்"
இவ்வாறு நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்.