Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் to எதிர்க்கட்சித்தலைவர் - விஜயகாந்தின் தனித்துவ தடம்...!

10:04 AM Dec 28, 2023 IST | Web Editor
Advertisement

நடிகராக இருந்து தமிழ்நாடு அரசியலில் எதிர்கட்சித்தலைவராக உருவெடுத்த விஜயகாந்தின் தனித்துவ தடம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Advertisement

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் ஆதிக்கம் செலுத்தி வந்த சூழலில் நடிக்க வந்து தனக்கென ஒரு அரியாசனத்தை தமிழ் திரையுலகில் உருவாக்கியவர் விஜயகாந்த். 1979-ஆம் ஆண்டு நடிக்கத் தொடங்கிய அவர் 2015-ஆம் ஆண்டு வரை சுமார் 150 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்து வந்த திரையுலக பயணம் குறித்து பார்க்கலாம்...

முதல் படத்தில் வில்லன்

சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட காதலால்,  படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு தனது அப்பாவின் அரிசி ஆலை நிர்வாகத்தைக் கவனித்து வந்த விஜயகாந்த் கனவுகளுடன் சென்னை வந்தார்.  பல்வேறு போராட்டங்களுக்கு பின் மாந்தோப்புக் கிளியே' படத்தை இயக்கிய எம்.ஏ.காஜாவின் 'இனிக்கும் இளமை என்னும் படத்தில் வில்லனாக அறிமுகமானார்  விஜயகாந்த் அந்தப் படத்தின் நாயகன் சுதாகர். அவரது அறிமுகப்படம் என்று பலாலும் இன்றளவும் நினைவுகூறப்படும் ஒரு படம் என்றால் அது.

கதாநாயகனாக்கிய தூரத்து இடிமுழக்கம்

'தூரத்து இடிமுழக்கம்.  கே.விஜயன் தயாரித்து இயக்கிய படம் இது.  மீனவர் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிய இந்தப் திரைப்படம் அப்போதைய மாற்றுப்பட முயற்சி வகையிலானது.  படத்துக்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி. டெல்லியில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம் இது. அங்கே திரையிடப்பட்ட மற்றுமொரு தமிழ் படம் பாரதிராஜா இயக்கிய நிழல்கள்.

எஸ்ஏசியுடன் வெற்றிக் கூட்டணி

அதிரடி கதாநாயகளாக விஜயகாந்த் அறியப்பட்டது 1981-ல் வெளி வந்த  'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் இருந்து தான்.  இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படமான இது மிகப் பெரிய வெற்றி பெற்றது.  இப்படம் இந்தி தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது.  இதன் இந்திப் பதிப்பில் ரஜினிகாந்தும், தெலுங்குப் பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்தனர்.  விஜயகாந்த் எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி இணைந்து அதே ஆண்டில் சாதிக்கொரு நீதி,  நெஞ்சிலே துணிவிருந்தால்,  நீதி பிழைத்தது என மூன்று திரைப்படங்களை வெளியிட்டது.
ரஜினிகாந்திற்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் என்பதுபோல்,  விஜயகாந்திற்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம்.  இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார்.

கிராமங்களுக்கு கொண்டு சேர்த்த சிவப்பு மல்லி

ஏவி.எம். தயாரிப்பில் இராம.நாராயணன் இயக்கத்தில் நாயகனாக நடித்த 'சிவப்பு மல்லி’ திரைப்படம் தான் விஜயகாந்தை கிராமங்கள் வரை கொண்டு சென்றது.  ஆகஸ்ட் 15 அன்று வெளியான இப்படம் தொழிலாளர் வர்க்கத்தில் ஒருவராக அவர்களுடைய நம்பிக்கைக்குரியவராக இவரை மாற்றியது.

வைரமுத்துவின் வரிகளில் இடம் பெற்ற ‘எரிமலை எப்படிப் பொறுக்கும்’ பாடல் அனல் கக்கும் ரகம் என்றால்.  இதே படத்தில் இடம்பெற்ற ‘ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்’ பாடல் காதல் களிப்பின் உச்சம்.  விஜயகாந்தை அதிகப் படங்களில் இயக்கியவர் இயக்குநர் இராம நாராயணன்தான்.  ‘சிவப்பு மல்லி தொடங்கி ‘சபாஷ்’, ‘தண்டனை’ , ‘கரிமேடு கருவாயன்’ ,  ‘வீரன் வேலுத்தம்பி’ எனப் பல திரைப்படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.  முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வாசனத்தை ‘வீரன் வேலுத்தம்பி’ , ‘சட்டம் ஒரு விளையாட்டு’ ஆகிய திரைப்படங்களின் பேசி நடித்துள்ளார்.

ஒரே ஆண்டில் 17 திரைப்படங்களில் கதாநாயகன்

இவர் கதாநாயகனாக நடித்து 1984ல் மொத்தம் 18 திரைப்படங்களும் 1985-ல் 17 திரைப்படங்களும் வெளியாகின.  இன்று வரை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் முறியடிக்க முடியாத சாதனையாக இது தொடர்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், இராம.நாராயணன் இயக்கிய படங்களில் விஜயகாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் இடதுசாரி,  முற்போக்கு எண்ணங்களின் பிரதிபளிப்பாக இருந்ததால் 1985-ஆம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் ‘புரட்சிக்கலைஞர்’ என அழைக்கப்பட்டார்.

இந்தக் காலகட்டத்தில் வெளியான ‘வெள்ளைப் புறா ஒன்று’ என்ற படத்தில் ஒரு காட்சியில் அவரது கழுத்தில் அணிந்திருக்கும் அரிவாள் சுத்தியல் டாலர் அணிந்த சங்கிலி சட்டையைத் தாண்டி தென்பட்டு அவரது ரசிகர்களை ஆரவாரிக்க செய்தது.  இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் பின்நாட்களில் தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் நடிப்பதில்லை என்ற கொள்கையை கடைசிவரை கடைப்பிடித்தார்.

ரஜினி, கமலுக்கு போட்டியாக விஜயகாந்த்

ரஜினிகாந்த-கமல்ஹாசன் போட்டிக்கு நடுவே தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வெற்றி கண்டவர் விஜயகாந்த.  ‘பி’ மற்றும் ‘சி’ சென்டர்களில் விஜயகாந்த் படம் என்றாலே அது ஆக்க்ஷன் படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது.  இவரது சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் பெருகியதாலோ என்னவோ. அதன்பின்பு பல திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளில் தான் விஜயகாந்தின் அறிமுகமே இருந்தது.
கிராமங்களின் ஊர்த் திருவிழாக்களில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் படங்களைத் திரையிட பெரிய சண்டையே நடக்கும்.  அந்த நேரத்தில் விஜயகாந்த் திரைப்படம் ஏதாவது ஒன்றைத் திரையிட்டு கிராமத்தின் மொத்தக் கூட்டத்தையும் சண்டையின்றி உட்கார வைப்பது மாற்றுத் தீர்வாக பயன்பட்டு வந்தது.

புதுமுக இயக்குநர்களின் புகலிடம்

புதுமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி,  திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயகாந்தையே சேரும்.  ஆபாவாணன் -  ஆர்.அரவிந்தராஜ் கூட்டணியில் ‘ஊமை விழிகள்’,  ‘உழவன் மகன்’ போன்ற திரைப்படங்களும் ஆர்கே.செல்வமணியின் இயக்கத்தில் ‘புலன் விசாரணை’ , ‘கேப்டன் பிரபாகரன்’ R.V.உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னக்கவுண்டர்’ போன்ற
வெற்றிப்படங்களில் நடித்தவர் விஜயகாந்த்.

1990 காலகட்டத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்கள் நேராகக் கதை சொல்லும் இடமாக விஜயகாத்தின் அலுவலகம்தான திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டனாக மாறிய விஜயகாந்த்

போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆக்க்ஷன் ஹிரோ ஆக முடியாது என்பது சினிமாவில் எழுதப்படாத விதி.  அந்த வகையில் போலீஸ், ராணுவம் என காக்கி உடை அணிந்து அநீதிக்கு எதிராக போராடும் கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களில் அதிகம் நடித்தவர் விஜயகாந்த் என்றே சொல்லலாம். இன்றும் போலீஸ் வேடமென்றால் தமிழ் ரசிகர்களின் மனதில் முதலில் வந்து நிற்பது விஜயகாந்தாகத்தான் இருக்கும். தனது 100-வது படமான கேப்டன் பிரபாகரன் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் கேப்டன் ஆக மாறிப்போனார் விஜயகாந்த்.

100-வது படத்தை வெற்றியாக்கிய ஒரே ஹீரோ

ரஜினியின் 100-வது படமான ராகவேந்திரா கமல்ஹாசனின் 100-வது படமான ராஜபார்வை இரண்டும் தோல்வி கண்டிருந்த நிலையில் அந்தக் காலகட்டத்தில் நடித்த நடிகர்களில் 100-வது படம் வெற்றிப்படமாக அமைந்ததும் விஜயகாந்துக்குதான்.

ஊமை விழிகள்,  புலன் விசாரணை,  செந்தூரப்பூவே,  சத்ரியன்,  பெரியண்ணா, வானத்தைப் போல போன்ற திரைப்படங்களில்,  தனது நிஜ வயதைவிட அதிகமான வயதுடைய கதாபாத்திரங்களில் நடித்தார்.  அதிரடி சுதாநாயகர்கள் படத்தின் முடிவின் மரணம் அடைவதை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றிருந்த காலகட்டத்திலேயே செந்தாரப் பூவே, வைதேகி காத்திருந்தாள்,  ரமணா ஆகிய திரைப்படங்களில் நடித்து அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தார்.  ஏழைப் பங்காளனாகவும், கோபக்கார இளைஞனாகவும் தொடர்ந்து ஆக்சன் படங்களிலும் புரட்சிப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்தின் மென்மையான பக்கத்தை வெளிப்படுத்தி அவரை பாசக்கார மனிதனாக ஆக்கிய படம் விசுவின் ‘டௌரி கல்யாணம்’ இதற்கு இசையமைத்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

விஜயகாந்த் - விஜய் நட்பு

எஸ்.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான மற்றொரு திரைப்படம் ‘வெற்றி’ . இதில் எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டி வெற்றி பெறுபவராக விஜயகாந்த் நடித்தார்.  இந்தப் படத்தில் சிறுவன் விஜயகாந்தாக அறிமுகமானார் நடிகர் விஜய்.  பின்னாளில் நடிகர் விஜய்யின் வளர்ச்சிக்காக செந்தூரப்பாண்டியில் நடித்துக்கொடுத்தார் விஜயகாந்த்.

சிறுமுகை இயக்கிய 'அலை ஓசை' படத்தின் போராடடா ஒரு வாளேந்தடா.... பாடல் ஒடுக்கப்பட்டோரின் இதய கீதமாக இப்போதும் ஒலிக்கிறது.  பாலு ஆனந்தின் இயக்கத்தில் இவர் நடித்த ‘நானே ராஜா நானே மந்திரி’ திரைப்படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டது.  ஆனால், அதன் நகைச்சுவையைவிட ரசிகர்கள் மனத்தில் நிற்பது மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் என்னும் காதல் பாடல்தான்.

காவல்துறை அதிகாரி என்றால் விஜயகாந்த் தான்

காவல்துறை அதிகாரியாக ஏராளமான படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளபோதும் ஊமை விழிகள் படத்தின் டி.எஸ்.பி தீனதயாளன் கதாபாத்திரம் காலம் கடந்து சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.  அதற்கு காரணம் வழக்கமான விஜயகாந்த் படங்கள் போன்று வசனங்களை அள்ளி வீசாமல் மிகவும் இயல்பாகத் தனது நடிப்பை அதில் அவர் தந்திருப்பார்.  திரைப்பட கல்லூரி மாணவர்களின் உழைப்பில் உருவான இந்தப் படத்துக்கு விஜயகாந்த் பெரிய ஒத்துழைப்யை நல்கியிருக்கிறார்.  இந்த வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் நடிகர் சிவகுமார்தான் எங்கிறார்கள்.  பத்திரிகையாளர்களின் உணர்வை வெளிப்படுத்திய இப்படத்தின் தோல்வி நிலையென நினைத்தால்' பாடல் தளர்வுற்றவர்களின் ஊக்க மருந்தாக இன்றுவரை செயல்படுகிறது.

அனைத்து ஹீரோக்களுடனும் நடித்தவர்

விஜயகாந்த் நடித்த மனக்கணக்கு படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன்.  சிவாஜி கணேசனுடன் வீரபாண்டியன் படத்திலும்,  பிரபுவுடன் ‘காலையும் நீயே மாலையும் நீயே’ திரைப்படத்திலும் விஜயகாந்த் இணைத்து நடித்துள்ளார்.
இவர் நடித்து டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்த கூலிக்காரன் படத்தில் முதலில் நடிப்பதாக பேசப்பட்டவர் ரஜினிகாந்த்.  ஆனால் அப்போது அவர் கேட்ட சம்பளத்தில் அந்தப் படமே எடுக்கப்பட்டுவிட்டதாக அந்த நேரத்தில் பத்திரிகைகள் எழுதியிருந்தன.  இந்தப் படத்தைத் தயாரித்த தாணுவின் இயக்கத்தில் புதுப்பாடகன் படத்தில் பின்னார் அவருக்கு நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த்.

இப்ராகிம் ராவுத்தர் - விஜயகாந்த் நட்பு

சினிமாவில் விஜயகாந்த் வெற்றிகரமான சுதாநாயகனாக உச்சம் தொட உறுதுணையாக இருந்தவர் அவாது நண்பரும் தயாரிப்பாளருமான இப்ராகிம் ராவுத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.  எல்லோருக்கும் உதவுபவராகத் திரைப்படத்தில் நடிப்பதைவிட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகப் பிறருக்குத் தன்னால் இயன்றவரை உதவியவர் விஜயகாந்த் என்றே சொல்ல வேண்டும்.  நடிகை வடிவுக்கரசிக்காக 'அன்னை என்தெய்வம்’ ,  நடிகர் சரத்குமாருக்காக ‘தாய்மொழி’ என தன்னைப் போன்ற நடிகர் நடிகைகளுக்காகப் படங்களில் நடித்துக்கொடுத்து உதவியவர் விஜயகாந்த்.

உதவி இயக்குநர்களின் பசியை போக்கிய அலுவலகம்

விஜயகாந்த் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த தொடக்க காலத்தில் சென்னை தியாகராய நகரில் அவரது அலுவலகம் இயங்கியது.  திரைப்படத்துறை சார்ந்து எவர் அங்கு சென்றாலும் அவர்கள் வந்த காரணத்தை கேட்பதற்கு முன்பாக முதலில் உணவு அருந்திவிட்டு வருமாறு அலுவலக ஊழியர்கள் கூறுவார்களாம்.  உணவு விஷயத்தில் தான் நடிக்கும் படங்களில் தனக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ அதுவே கடை நிலை ஊழியருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை விஜயகாந்த் உறுதியாக கடைபிடித்து வந்ததால் சினிமா தொழிலாளர்கள் அவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்றே அழைத்தனர்.

பிறந்த நாளின் போது நலத்திட்ட உதவிகள்

விஜயகாந்த ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வசதி இல்லாதவர்களுக்கு கல்வி கற்க உதவி செய்வதை வெளிப்படையாக அறிவிக்காமல் செய்து வந்தார். அவரது உதவியால் கல்வி கற்று இந்திய ஆட்சிப் பணி மற்றும் மருத்துவர்களாக ஏராளமானோர் உள்ளனர். இந்நிலையில்,  சிறைப்பறவை,  உழவன் மகன்,  தெற்கத்திக் கள்ளன்,  என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்,  பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே ஆகிய திரைப்படங்கள் அவரது ரசிகர்களை அதிகரிக்க செய்தது.

நடிகர் சங்கத் தலைவர்

1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி சங்கத்திற்கு வாங்கப்பட்ட இடத்திற்காக பெற்ற கடனை அடைத்து நடிகர் சங்க கட்டடத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.

ரசிகர் மன்றத்திற்கு தனிக் கொடி மற்றும் தனிக்கட்சி

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டியவர். விஜயகாந்த் 2000-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்திற்கென கொடியை அறிமுகப்படுத்தி பல படங்களில் அதைப் பயன்படுத்தவும் செய்தார்.  அரசியலுக்கு வருவேன் என சொன்னதோடு 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 தேதி தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

தேமுதிக தொடக்கம்

தனது ரசிகர் மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் அறிவித்தார். அடுத்து வந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தனி ஆளாகத் தன் சுட்சியின் சார்பாக சட்டமன்றம் சென்றார். 2011- ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு29 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கம்பீரமாக சட்டமன்றத்திற்குள் நுழைத்தார் விஜயகாந்த்.

சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த் தனது முன் கோபத்தாலும்,  உள்ளதை உள்ளபடிப் பேசிவிடுவதாலும் இழந்தவை அதிகம்.  எதுவான போதும் சினிமா, அரசியல் இரண்டிலும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கிவிட்டார் என்பதே நிஜம்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் விஜய்காந்த் இன்று காலமானார்.

Tags :
actor vijaykanthDMDK CheifDMKDvijaykanthVijaykanth deathVijaykanth Health Update
Advertisement
Next Article