டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழா : சிறந்த ஜூரி விருதை வென்ற சூரியின் கொட்டுக்காளி திரைப்படம்!
டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் சிறந்த ஜூரி விருதை பெற்றுள்ளது.
'கூழாங்கல்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'கொட்டுக்காளி' திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்சன்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த திரைப்படம் ‘டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில்’ போட்டியிட தேர்வாகியுள்ளதாக கடந்த மாதம் நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, ருமேனியாவில் நடைபெற்ற டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் சிறந்த ஜூரி விருதை பெற்றுள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : “கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
முன்னதாக, இந்த திரைப்படம் 74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு 16 பிப்ரவரி 2024 அன்று திரையிடப்பட்டது. இதன் மூலம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றது.