‘ஆடு ஜீவிதம்' படத்திற்காக நடிகர் பிருத்விராஜ் செய்துள்ள காரியம் குறித்து ஒளிப்பதிவாளர் சுனில் கே.எஸ் பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ளது ஆடுஜீவிதம் திரைப்படம் . இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்) தழுவி எடுக்கப்பட்டதாகும். மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். கே.எஸ்.சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார்.
2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது. நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மார்ச் 28-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நடிகர் பிருத்விராஜின் நடிப்பும் படத்தின் உருவாக்கமும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.
இப்படம், மலையாள சினிமாவில் உலக முழுவதும் குறுகிய நாட்களில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் மலையாள திரையுலகின் ரூ.100 கோடி கிளப்பில் இப்படம் இணைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஒரு காட்சியில் பல ஆண்டுகளுக்கு பிறகு பாலைவனத்தில் குளிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது மொத்த ஆடையையும் களைத்து விட்டு தண்ணீர் முன்பு போய் நஜீப் நிற்பதை போன்று படமாக்கப்பட்டிருக்கும். இந்த சீனில் பிருத்விராஜ் உடம்பெல்லாம் மெலிந்து, பார்ப்பவர்களுக்கு கண்ணீர் வர வைக்கும் தோற்றத்தில் இருப்பார்.
இந்நிலையில் இந்த காட்சி படமாக்கப்பட்டது குறித்து ஒளிப்பதிவாளர் சுனில் கே.எஸ். நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அந்த காட்சியை படமாக்க எல்லா திட்டமும் போட்டு சரியாக சுமார் 3.30 மணிக்கு எடுத்தோம். இதற்காக சுமார் 3 நாட்கள் 72 மணிநேரம் உணவே அருந்தாமல் இருந்தார் பிருத்விராஜ். ஏற்கனவே பல மடங்கு உடல் எடையை குறைத்திருந்த பிருத்விராஜ், கடைசியாக தண்ணீர் கூட குடிக்கவில்லை.
கடைசியாக 30 எம்எல் வோட்கோ மட்டும் கொடுக்கப்பட்டது. அது எதற்காக என்றால் வோட்கா உடலில் உள்ள மொத்த தண்ணீரையும் சுண்டி இழுத்துவிடும். அந்த சீனுக்காக உடம்பில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் நடித்தார். நாற்காலியில் உட்கார வைத்து தான் அந்த ஸ்பாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இவ்வாறு ஒளிப்பதிவாளர் சுனில் பகிர்ந்துள்ள தகவல் பலர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தளவுக்கு பிருத்விராஜ் உயிரை கொடுத்து நடித்துள்ளாரா என வியந்து போய் பலரும் பாராட்டி தள்ளி வருகின்றனர்.