Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் முகேஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்- #ActressSaritha சொல்வது என்ன?

03:11 PM Aug 30, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது முன்னாள் மனைவியான நடிகை சரிதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Advertisement

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள உயர்நீதிமன்றமும் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக  குற்றம் சாட்டினார்.

இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்கியதை தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டினார். இதன் பின்னர் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார். அதேபோல், கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் இயக்குநர் ரஞ்சித் விலகினார்.

இதற்கு நடுவில் நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்க (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜிநாமா செய்தனர். இதன் பின்னர் விசாரணைக் குழுவில் நடிகைகள் அளித்த புகாரின்  அடிப்படையில் நடிகர் சித்திக் , இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சூழலில், தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க கோரி எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றத்தில் நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் மனு அளித்திருந்த நிலையில், 5 நாள்கள் அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யக் கோரி நடிகர் முகேஷுக்கு எதிராக கேரள காங்கிரஸினர் இன்று காலை முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்

நடிகர் முகேசும் நடிகை சரிதாவும் கடந்த 1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2011-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் நடிகர் முகேஷ் பற்றி அவரது முன்னாள் மனைவி நடிகை சரிதா பல அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் தெரிவித்ததாவது..

”நான் கர்ப்பிணியாக இருந்த போது சண்டை போட்டு என்னை வயிற்றில் அவர் எட்டி உதைத்தார். நான் கீழே விழுந்து கதறி அழுதேன். அதனைப் பார்த்த அவர் என்னை ஒரு நல்ல நடிகை என்று கிண்டல் செய்து அவமானப்படுத்தினார். 9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ஒன்றாக இரவு உணவிற்கு சென்றோம். திரும்பி வரும்போது, நான் காரில் ஏற முயன்றபோது, அவர் என்னை ஏமாற்றிக் கொண்டே காரை முன்னும் பின்னுமாக எடுத்துச் சென்றார். காரின் பின்னால் ஓடும் போது நான் விழுந்தேன். கீழே உட்கார்ந்து அழுது விட்டேன்.

இதேபோல ஒருமுறை, அவர் நள்ளிரவில் குடிபோதையில் திரும்பியபோது, ஏன் தாமதமாக வந்தீர்கள் என்று நான் கேட்டேன். அவர் என்னை முடியை பிடித்து இழுத்து, தரையில் தள்ளி அடித்தார். அதன்பின்னர் அவர் கொடுமை தாங்க முடியாமல்தான் வீட்டை விட்டு வெளியேறினேன். பின்னர் ஒரு நாள் முகேஷின் தந்தை என்னை பார்க்க வீட்டுக்கு வந்தார். அவர் என் கையை பிடித்து முகேஷின் நடவடிக்கைகள் சரியில்லை என கூறி அழுததோடு, அவரைப் பற்றி யாரிடமும் வெளியே சொல்ல வேண்டாம் என சத்தியம் வாங்கினார். இதனால் அவர் உயிருடன் இருந்தவரை அதை வெளியில் சொல்லவில்லை" என சரிதா கூறி இருக்கிறார்.

நடிகை சரிதாவின் குற்றச்சாட்டுக்கள் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Actor MukeshActress SarithaHema CommissionHema Commission ReportKeralaMalayalam film industry
Advertisement
Next Article