நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சை பேச்சு; வழக்குப்பதிவு செய்த தேசிய மகளிர் ஆணையம்!
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியானது. த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், மன்சூர் அலி கான் விஜயின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார்.
இதனிடையே சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலி கான், த்ரிஷா குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார். மன்சூர் அலி கானின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலி கான் மீது தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் ஐ.பி.சி சட்டபிரிவு 509 பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களை பயன்படுத்தி மன்சூர் அலி கான் மீது வழக்குப்பதிவு செய்யவும் தமிழ்நாடு டி.ஜி.பிக்கு அறிவுறுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டும் இதுபோன்ற கருத்துகள் கண்டிக்கப்பட வேண்டும் எனவும் தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.