கேப்டன் விஜயகாந்தின் துணிச்சலை புகழ்ந்த நடிகர் கமல்ஹாசன்..!
கேப்டன் விஜயகாந்தின் துணிச்சலை நடிகர் கமல்ஹாசன் புகழ்ந்து பேசினார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது மறைவு, தமிழக அரசியலுக்கும், சினிமாத்துறைக்கும் பெரும் இழப்பு என்று அரசியல் தலைவர்களும், சினிமாத்துறையினரும் இரங்கல் கூறினர்.
டிசம்பர் 29 ஆம் தேதி விஜயகாந்தின் பூத உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களும், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தினமும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், இப்படி ஒரு நாளை எதிர்பார்க்க முடியாததற்கு ஒத்திகை எதுவும் கிடையாது. விஜயகாந்தை நான் முதலில் சந்தித்தபோது அவர் என்னிடம் எப்படி பழகினாரோ அப்படித்தான் பெரிய நட்சத்திரமான பின்பும் பேசினார். விஜயராஜ், விஜயகாந்த் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத அளவில் பார்த்துக் கொண்டதற்கு காரணம் நானல்ல அவர்தான்.
பல விமர்சனங்கள், அவமானங்களைத் தாங்கி, மேலோங்கி வந்தவர். அதற்காக எந்த காழ்ப்புணர்ச்சியை வைத்துக்கொள்ளாமல், தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் யாருக்கும் ஏற்பட கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர். அது உண்மையில் பாராட்ட வேண்டிய பெரிய விஷயம். மற்றவர்களுக்காக போராடும் குரல் அவருடையது. ஆரம்ப மற்றும் கடைநிலை நடிகர்களுக்கான குரலாக இருந்தார்.
தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய தலைவர்களுக்கெல்லாம் வரும் கூட்டம் இவருக்காகவும் வந்ததை நான் பார்த்தேன். அதுதான் அவர் சேர்த்த சொத்து. அவர் கொடுப்பது பல பேருக்கு தெரியாது. அவரால் பயனடைந்தவர்கள் அதை மறக்க மாட்டார்கள். 70,80-களில் அந்த சமூக அரசியலை ஓங்கி பிரதிபலிக்கும் சினிமா உருவமாக விஜயகாந்த் திகழ்ந்தார் என்றால் மிகையாகாது.
எனக்கு அவரிடம் பிடித்த பல நல்ல குணங்களில் ஒன்று, அவருடைய நியாயமான கோபம். அவருடைய கோபம் நடிகர் சங்கத்துக்கும் உதவியிருக்கிறது என நினைக்கிறேன். அவர் நடித்த முதல் படமாக ‘தூரத்து இடி முழக்கம்’ திரைப்பட விழாவுக்கு போக வேண்டிய படம். அதிலிருந்து ஒரு கமர்ஷியல் ஹீரோவாக பெயர் எடுத்தது அவரது திறமை. நானும் அவர் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளேன். அவருக்கு இருந்த நண்பர்கள் இங்கே கூடியிருக்கிறார்கள். தனக்கு பிடிக்காதவர்களைக்கூட அழைத்து பேசும் தைரியம் அவருக்கு உண்டு. அந்த மாதிரியான குணாதியசங்களை அவரிடம் இருந்து காப்பி அடிக்கலாம். அவர் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும். குட் பை கேப்டன்." என பேசினார்.