நடிகர் கவுண்டமணி மனைவியின் உடல் தகனம்... இறுதி சடங்கில் பங்கேற்ற சீமான்!
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த நகைச்சுவை நடிகராக உள்ள நடிகர்
கவுண்டமணியின் மனைவி சாந்தி (வயது 67) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இதனை அடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
750 திரைப்படங்களுக்கு மேல் நடித்து தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக உள்ள நடிகர் கவுண்டமணி, திரைத்துறைக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே சாந்தி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என்ற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் உடல்நலக்குறைவால் காலமான கவுண்டமணி மனைவி சாந்தியின் உடல் பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்களின் அஞ்சலிக்காக கவுண்டமணியின் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டது.
சாந்தியின் உடலுக்கு நேற்றைய தினம் நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதோடு கவுண்டமணியை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். அதோடு கவுண்டமணியுடன் 450 திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்து புகழ்பெற்ற செந்தில் சாந்தியின் மறைவிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்து கவுண்டமணிக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் நடிகர்கள் சத்யராஜ், ராஜேஷ், பாண்டியராஜ், இயக்குநர் சுந்தர்.சி, நடிகை அம்பிகா, வையாபுரி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் , நிழல்கள் ரவி, பாண்டியராஜன், நடிகர் சங்கம் சார்பாக பூச்சி முருகன் உள்ளிட்டோர் நேற்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இன்று காலை முதலே இயக்குநர் பி.வாசு மற்றும் நடிகர் அனுமோகன், திரைப்பட இயக்குனரும் ,நடிகருமான ஷாகுல் முகமது என்கிற ராஜ்கபூர், நடிகர் பாக்யராஜ் மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ், நடிகர்கள் கார்த்திக் பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நேரில் வந்து நடிகர் கவுண்டமணி மனைவி சாந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து தேனாம்பேட்டை இல்லத்தில் இருந்து நடிகர் கவுண்டமணி மனைவி
சாந்தியின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானம் கொண்டு செல்லப்பட்டது.
பெசன்ட் நகர் மின்மயானத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்டோர் நடிகர் சாந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதி சடங்குகளிலும் பங்கேற்றனர். இறுதி சடங்குகள் முடிவுற்ற பின்னர் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின்
உடல் தகனம் செய்யப்பட்டது.