RIP | நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்!
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் டெல்லி கணேஷ். இவர் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று (நவ.9) இரவு 11.30 மணியளவில் ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 80.
நடிகர் டெல்லி கணேஷ் 1964 - 1974 ஆம் ஆண்டு வரை இந்திய விமானப் படையில் பணியாற்றினார். பின்னர் 1976ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டினப் பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக நாடக நடிகராக இருந்துள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து டெல்லி கணேஷ் நடித்துள்ளார். இவர் குணச்சித்திரம், நகைச்சுவை உள்ளிட்ட கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். டெல்லி கணேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். டெல்லி கணேஷ் நடிப்பு மட்டுமின்றி, சிறந்த டப்பிங் கலைஞராகவும் இருந்தவர். மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் அவரது ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பலரும் வருகை புரியவுள்ளனர். அவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.