’வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - பொதுமக்கள் போராட்டம்!
வெள்ள நீரை வெளியேற்ற அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி சாயல்குடி நகராட்சி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம் பெய்த கனமழையால் தென்மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இந்நிலையில், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சூழ்ந்த வெள்ளநீரனது
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி பகுதியில் விவசாய நிலங்களை பெருமளவில்
சேதப்படுத்தியது. இந்நிலையில், கஞ்சம்பட்டி ஓடையில் இருந்து காட்டாற்று வெள்ளமாக வரும் மழை நீர் சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் மற்றும் ஈசிஆர்
சாலைகளில் தேங்கியது.
பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ள இடங்களிலும் பெருமளவில் மழைநீர்
தேங்கியது. குறிப்பாக அண்ணாநகர் குடியிருப்பில் முழங்கால் அளவுக்கு மழை நீர்
தேங்கியதால், அந்த பகுதியிலிருந்து பொதுமக்கள் வீடுகளை காலி செய்து
பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அண்ணா நகருக்கு வரும் மழை நீரை திசை திருப்பிவிட எந்த ஒரு
நடவடிக்கையும் எடுக்கவில்லை என நேற்று (டிச.22 ) இரவு சாயல்குடி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.