Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கைவிட்டுப் போன ‘கரும்பு விவசாயி’ சின்னம் - நாம் தமிழர் கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த விளக்கம் என்ன?

10:11 PM Mar 01, 2024 IST | Web Editor
Advertisement

'கரும்பு விவசாயி' சின்னம் கிடைக்காமல் போனதற்கு காரணம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், பாரதிய பிரஜா அய்க்யாதா கட்சி (BPA) என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனால், கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி சார்பில் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, நாம் தமிழர் கட்சி தரப்பில், "பல ஆண்டுகளாக பல தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டு இருக்கிறோம். ஆனால், இந்த முறை புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் அந்தச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது" என வாதிடப்பட்டது.

இந்த விசாரணையில் தேர்தல் ஆணையம் தரப்பில், "இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், பிப்ரவரி 13-ம் தேதி அந்த சின்னத்தை ஒதுக்கியது. இதில், எந்த விதிமீறலும் இல்லை. தாமதம் செய்தது நாம் தமிழர் கட்சியின் தவறு. கரும்பு விவசாயி சின்னத்தை தற்பொழுது பெற்றிருக்கக்கூடிய கட்சி, கடந்தாண்டு டிசம்பர் 17-ம் தேதி கேட்டிருந்தார்கள். நாம் தமிழர் கட்சி பிப்ரவரி 9-ம் தேதிதான் கேட்டார்கள். இதில், எப்படி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தை குறை கூற முடியும் என வாதத்தை முன்வைத்தனர்.

பின்னர், ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்துடன், குறிப்பிட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ள கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம் கிடைக்கும். அது இல்லாத நீங்கள் எப்படி கேட்க முடியும் என டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், “கரும்பு விவசாயி சின்னம் சுயேட்சை சின்னம். அதை முன்னுரிமை என்ற அடிப்படையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கும். இந்த நடைமுறையை எப்படி மாற்ற முடியும்? நாம் தமிழர் கட்சி என்பது அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருக்கும் பட்சத்தில், எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தைக் கேட்க முடியும்” எனவும் நீதிபதி கேள்வி எழுப்பி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Tags :
Delhi high courtLoksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesNTKParliament Election 2024SeemanTamilNadu
Advertisement
Next Article