8 நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்த ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம்... ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடிக்குமா?
ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியாகி 8 நாள்கள் ஆன நிலையில், ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. இதன்மூலம், மலையாளத் திரைப்படத்தில் மிகவேகமாக 100 கோடி ரூபாய் வசூலை கடந்த திரைப்படம் இது என கூறப்படுகிறது.
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ளது ஆடுஜீவிதம் திரைப்படம் . இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்) தழுவி எடுக்கப்பட்டதாகும். இந்த நாவலை எழுத்தாளர் பென்யாமின் எழுதியுள்ளார். மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
ஆடு ஜீவிதம் திரைப்படத்தை பிளஸ்ஸி ஐப் தாமஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். கே.எஸ்.சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார். 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது. நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியாகி 8 நாட்களில் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளதாக பிரித்விராஜ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், “பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை கடந்துள்ளது. எதிர்பாராத இந்த வெற்றிக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவில், ரசிகர்கள் மலையாளத் திரைப்படத்தில் மிகவேகமாக ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படம் இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டிய நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அதிரடியாக டபுள் செஞ்சுரி அடித்து 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.