உத்தரகாண்டில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு!
உத்தரகாண்டின் பாவ்ரி கார்வால் பகுதியை சேர்ந்தவர் பிரமோத் பின்ஜோலா. இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் தீவிர ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாக தினந்தோறும் இளைஞர் அதிகாலை எழுந்து வீட்டிற்கு வெளியில் சென்று உடற்பயிற்சிகளை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு அதிகாலையிலேயே சென்ற இளைஞர் பிரமோத் பின்ஜோலா சாலையில் நின்றபடி உடற்பயிற்சி செய்துள்ளார். அப்போது உடல் சோர்வு ஏற்பட்டதால் பயிற்சியை நிறுத்தி விட்டு, ஓரமாக அமர்ந்துள்ளார்.
அப்போது பிரமோத் பின்ஜோலா மயங்கி கீழே விழுந்துள்ளார். அதிகாலை நேரத்தில் அந்த பகுதியில் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பின்னர் அவ்வழியே சென்ற சிலர் இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இளம் வயதில், உடற்பயிற்சி செய்வதில் தீவிர ஆர்வம் கொண்ட நபர் பயிற்சி மேற்கொண்டபோது மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.