வேலூர் | லாரியில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
வேலூர் மாநகராட்சி தண்ணீர் லாரியில் சிக்கி பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே
உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் அருகே கணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவர் காட்பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் (software company) வேலை செய்து வருகிறார். இவர் இன்று வேலைக்கு செல்வதற்காக அவருடைய தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வேலூர் - காட்பாடி சாலைக்கு அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதாமல் இருப்பதற்காக இருசக்கர வாகனத்தில் பிரேக்கை பிடித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பின்னே வந்த வேலூர் மாநகராட்சி தண்ணீர் லாரி அஸ்வினி தலை மீது ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து நடந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
வெளியாகி சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த அஸ்வினியின்
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.