நீலகிரி | தொடர்ந்து ஊருக்குள் படையெடுக்கும் புல்லட் ராஜா யானை - விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
பந்தலூர் அருகே சேரங்கோட்டில் நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த புல்லட் ராஜா யானை வீடுகளை சேதப்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் புல்லட் ராஜா என்ற ஒற்றை ஆண் யானை உலா வருகிறது. இந்த யானை அப்பகுதியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தி அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சூறையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையை கண்டித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதன் அடிப்படையில் புல்லட் ராஜா யானையை CT16 கோட்டமலை பாஸ்கர் என வனத்துறையினரால் பெயரிடப்பட்டு 75 க்கும் மேற்பட்ட வன பணியாளர்கள் 4 குழுக்களாக பிரிந்து அதிநவீன ட்ரோன் கேமராக்களை கொண்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். மேலும் கடந்த 3 நாட்களாக பொம்மன் மற்றும் சீனிவாசன் ஆகிய இரண்டு கும்கி யானைகளை கொண்டு புல்லட் ராஜா யானை ஊருக்குள் நுழைவதை தடுக்க பாதுகாப்பு பணிகளில் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சேரங்கோடு பகுதியில் நள்ளிரவு மீண்டும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின்
குடியிருப்பு பகுதியில் உலா வந்த புல்லட் ராஜா யானை 15 க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தியது. இதனால் கிராம மக்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானையை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.