கனமழையால் அரசு பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!
நீலகிரியில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், அனுமாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது ராட்சத மரம் முறிந்து விழுந்தது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த ஒருவார காலமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டும், மரங்கள் விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று உதகை அருகே உள்ள அனுமாபுரம் பகுதியில், கூடலூரில் இருந்து உதகை வழியாக பயணிகளுடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவு பேருந்தின் மீது சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து விழுந்துள்ளது. இதில் பேருந்தின் முன்பகுதி மற்றும் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இவ்விபத்தில் பேருந்தின் ஓட்டுநருக்கு சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.