தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்? ஏன் தெரியுமா?
பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வர். இந்த காலங்களில் அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கூட்ட நெரிசல் அதிகரித்தே காணப்படுகிறது.
இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அரசுப் பேருந்துகளுடன், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இந்த நாள்களில் ஊரகப் பகுதிகளில் உள்ள பேருந்துகளை நகரங்களில் இயக்குவதால் அங்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அதற்கு ஓட்டுநர், நடத்துனர்களை அரசு நியமிக்கும். எந்தெந்த ஊர்களுக்கு எத்தனை முறை பேருந்து இயக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
பேருந்து பராமரிப்பை தனியார் பேருந்து உரிமையாளர்கள் மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. பண்டிகை நாள்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதால் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.