குவைத் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து - தமிழர்கள் உட்பட 40பேர் உயிரிழப்பு!
குவைத் நாட்டின் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் தமிழர்கள் உட்பட 40பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது தமிழர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 10 பேர் இந்தியர்கள் எனவும் கூறப்படுகிறது.
கேரளத்தை சேர்ந்த தொழிலதிபர் கேஜி ஆபிரஹாமுக்குச் சொந்தமான கட்டடமென மலையாள பத்திரிகையான மனோராமா தெரிவித்துள்ளது. அதே போல கே.ஜி.ஆபிரஹாமின் என்பிடிசி சூப்பர் மார்கெட் ஊழியர்களும் இந்தக் கட்டடத்தில் தங்கியுள்ளனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட குவைத் துணை பிரதமர் பஹத் யூசுப் அல்- சபா இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கட்டட உடைமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாவது..
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்திய தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்” என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.