திருத்துறைப்பூண்டியில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோத திருவிழா!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர்-கற்பகநாதர்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீ நல்லமாணிக்கர் சாமிகள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு ஸ்ரீ நல்லமாணிக்கர் சாமிகள் கோயில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கிடா வெட்டு நேர்த்திக்கடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதற்காக அதிகாலையிலேயே 500க்கும் மேற்பட்ட கிடாக்கள் பலியிட்டு பூஜை செய்து சாமிக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து சாமிக்கு பலாப்பழங்கள், வாழைப்பழம், தேங்காய், வெல்லம் உள்ளிட்டவை படையலிட்டு பூஜை செய்யப்பட்டது. இந்த திருவிழாவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.