செருப்பைத் திருப்பிக் கொடுக்காததால் மெரினாவில் நடந்த கத்திக்குத்து!
சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள நொச்சிக்குப்பம் பகுதியில், போதையில் ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்தில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் சந்தோஷ் என்பவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த அபிமன்யு (என்கிற அபி) என்பவரும், சந்தோஷ் என்பவரும் நண்பர்கள். இருவரும் நேற்று இரவு மெரினா கடற்கரையில் சந்தித்துக்கொண்டபோது, குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, சந்தோஷிடம் இருந்து அபிமன்யு ஒரு செருப்பைப் பெற்றுக்கொண்டதாகவும், பின்னர் அதனைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததாகவும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, ஆத்திரமடைந்த அபிமன்யு, அருகில் கிடந்த கத்தியை எடுத்து சந்தோஷின் வயிற்றில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ், உடனடியாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மெரினா D5 காவல் நிலைய போலீஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்ட அபிமன்யுவை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அபிமன்யு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு செருப்புக்காக ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்து வரை சென்ற இந்தச் சம்பவம், அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.