பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டு அட்டூழியம்! நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட்!
திருப்பூர் அருகே அரசுப் பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டதால் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையம் புதிய பேருந்து நிலையத்தில் கோபிசெட்டிபாளையம் செல்லும் அரசுப் பேருந்தில் முதியவர் ஒருவர் சாக்குப் பையுடன் ஏற முயன்றுள்ளார். அப்போது அந்தப் பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் அந்த முதியவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டனர்.
பின்னர் அந்த முதியவரை நடத்துநர் பிளாஸ்டிக் பைப் கொண்டு அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை கீழே தள்ளிவிட்டதில் அந்த முதியவர் பேருந்து நிலையத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். இந்நிலையில் பிச்சம்பாளையம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவர் இச்சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதையடுத்து, அந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள் : மனித விரலைத் தொடர்ந்து பூரான்! ஐஸ்கிரீம் சாப்பிட நினைத்தது ஒரு குத்தமா?
இதையடுத்து, அந்த வீடியோ பதிவு இணையத்தில் வேகமாகப் பரவி, போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் கவனத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து முதியவரை, பேருந்திலிருந்து கீழே தள்ளிய நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும், பொறுப்பான அரசு ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.