"வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம்" - அன்புமணி ராமதாஸ்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் கடந்த சில தினங்களாக மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்தியா மீது பாகிஸ்தான் நேற்று நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்துள்ளார். இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"நாட்டைக் காக்கும் போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம்: ராணுவத்திற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக், பாகிஸ்தான் நடத்திய தொடர் பீரங்கித் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. நம்மைக் காப்பதற்காக இன்னுயிரை ஈந்த அந்த பெருமகனுக்கு எனது வீரவணக்கங்களை செலுத்துகிறேன்.
பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல்களை ஏவி விட்டு வருகிறது. அவற்றிலிருந்து நாட்டையும், நம்மையும் காக்கும் புனிதப் பணியில், தங்களின் உயிரைப் பணயம் வைத்து நமது படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மிகவும் நெருக்கடியான இந்தக் காலக்கட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.