எண்ணூர் துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் மாலுமி மர்மமான முறையில் உயிரிழப்பு - காவல்துறை தீவிர விசாரணை!
எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த சீனா நாட்டை சேர்ந்த ‘கியோ யுஹான் -12' என்ற கப்பலில் சீன மாலுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீன நாட்டை சேர்ந்த 'கியோ யுஹான் -12' என்ற சரக்கு கப்பல், கடந்த ஏப். 6-ம் தேதி இந்தோனேஷியா நாட்டில் இருந்து, நிலக்கரி ஏற்றிக்கொண்டு மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு புறப்பட்டது. இந்த கப்பலில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 22 மாலுமிகள் பணியில் இருந்தனர்.
அதில், சீன நாட்டை சேர்ந்த, கோங் யூவூ, என்ற 57 வயது நிரம்பிய மாலுமி கப்பல் நிர்வாக பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவர், கப்பல் புறப்பட்ட நாளில் இருந்து காணவில்லை என இந்தோனேஷியா துறைமுகத்தில், கேப்டன் பியூ கொய்பியோ புகார் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் கடந்த 20-ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்நிலையில் கடந்த ஏப். 22-ம் தேதி இரவு காணாமல் போனதாக கூறப்பட்ட கோங் யூவூ இறந்து கிடப்பதை சக மாலுமிகள் கண்டனர். பின், கப்பலின் கேப்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, துறைமுக அதிகாரிகளின் தகவலின்படி, மீஞ்சூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் துறைமுக சுகாதார அதிகாரியிடம் இறப்பு உறுதி சான்றை பெற்று சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து உதவி கமிஷனர் கிரி தலைமையில், மீஞ்சூர் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற் கூராய்வு அறிக்கை பெற்ற பின், இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.