2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சில முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பு!
தமிழ்நாடு அளவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சில முக்கியமான நிகழ்வுகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
2023 ஆண்டு இன்னும் ஒரிரு தினங்களில் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில், தமிழ்நாட்டில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை பற்றி விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.
ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் செல்லும்
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மே மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது என்றும், தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
நாகப்பட்டினம் டூ இலங்கை பயணிகள் கப்பல் சேவை துவக்கம்
தமிழ்நாடு நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை கடந்த அக்டோபர் 14ம் தேதி மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். அப்போது அவர், 'இக்கப்பல் சேவை தொடங்கப்பட்டிருப்பது நமது உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்' ஆகும் என்று உரையாற்றினார்.
தினமும் நாகை துறைமுகத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் இந்த கப்பல் மதியம் 12 மணிக்கு கங்கேசன்துறை துறைமுகத்தை அடையும்.மீண்டும் அங்கு மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை திரும்பும். ஒருவர் 50 கிலோ வரையிலான பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். இலங்கைக்கு படகில் செல்ல விசா மற்றும் பாஸ்போர்ட் கட்டாயமாகும்.
திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்
திருநெல்வேலி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே துவக்கி வைக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இந்த ரயில் சேவையினை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.இந்நிலையில், கடந்த செப்டம்பர்-24ம் தேதி பிரதமர் மோடி 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை துவக்கி வைத்தார்.
அதில் ஒன்றுதான் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில். இதற்கான துவக்கவிழா திருநெல்வேலி ஜங்க்ஷனில் நடந்தது. முதல்நாள் சேவையில் பயணிகளோடு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பயணித்தனர். தினந்தோறும் இருமார்க்கமாகவும் இயக்கப்படும் இந்த ரயில் செவ்வாய்கிழமைகளில் மட்டும் பராமரிப்பு காரணமாக இயக்கப்படுவதில்லை.
லக்னோ - ராமேஸ்வரம் பாரத் கவுரவ் ரெயில் தீ விபத்து
உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்த 63 பேர் பாரத் கவுரவ் ரயில் எனப்படும் ஆன்மீக சுற்றுலா ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்து கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ராமேஸ்வரம் சென்றனர். அங்கு ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.அப்போது,நாகர்கோவில் இருந்து புனலூர் மதுரை விரைவு ரயிலில் இணைக்கப்பட்ட பாரத் கவுரவ் ரயில் பெட்டிகள் ஆகஸ்ட் 17ம் தேதி 3 மணியளவில் மதுரை வந்தடைந்தன. இந்த ரெயில் பெட்டிகள் அனந்தபுரி விரைவு ரயிலுடன் இணைக்கப்பட்டு ஆகஸ்ட் 18ம் தேதி சென்னை செல்லவிருந்தது.
மதுரை ரயில்நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளில் ஆகஸ்ட் 17ம் தேதி அதிகாலை 5.15 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் ஃபடுகாயமடைந்தனர். ரயிலில் வைத்து சமையல் செய்ய சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக ரயில்வே விசாரணையில் தெரியவந்துள்ளது.
விண்வெளிச் சாதனையாளர்கள்
'சந்திரயான் 3' முலம் நிலவின் தென் துருவத்தைச் சென்றடைந்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. இத்திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர் பி.வீரமுத்துவேல், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர், அரசுப் பள்ளியில் படித்தவர். இஸ்ரோவில் திட்டப் பொறியாளர், திட்ட மேலாளர் எனப் படிப்படியாக உயர்ந்து 'சந்திரயான் 3' திட்ட இயக்குநர் ஆனார்.
இதனையடுத்து சூரியனை ஆராய்ச்சி செய்ய ஏவப்பட்ட 'ஆதித்யா எல் 1' விண்கலத் திட்டத்தின் இயக்குநராக, தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த நிகர் ஷாஜி செயல்பட்டுவருகிறார். சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 ஆகிய விண்கலத்திற்கு திட்ட இயக்குநராக தமிழ்நாட்டைச் சார்ந்த விஞ்ஞானிகள் செயல்பட்டது இந்தியாவையே திரும்பி பார்க்கும் நிகழ்வாக அமைந்தது.
முழு மதிப்பெண்கள்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில், 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற முதல் மாணவன் என்ற சாதனையுடன் முதலிடம் பிடித்தார்.
இதேபோல 2023 ஆம் ஆண்டிற்கான பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தார்.
பாம்பு பிடி வல்லுநர்கள்
பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றனர். செங்கல்பட்டு அருகே சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். விஷம் கொண்ட பாம்புகளைப் பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். மேலும் இருவரும் உலகம் முழுவதும் பயணம் செய்து பாம்புகளைப் பிடித்துள்ளனர்.
பொம்மனும் பெள்ளியும்
நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளைப் பராமரிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன்-பெள்ளி தம்பதியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்தத் தம்பதிக்கும் யானைகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பு ஆவணப்படத்தில் பதிவாகியிருந்தது.
பொம்மன் மற்றும் பெல்லிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு ஒன்றினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சிகரம் தொட்ட தமிழ்ப் பெண்
விருதுநகர் ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. இவரின் வயது 34. இவர் உலகில் உயரமான, எவரெஸ்ட் சிகரத்தை (8,850 மீட்டர்) எட்டிய முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். மே 23 அன்று நள்ளிரவு 12 மணிக்குச் சிகரத்தை எட்டினார். கையிருப்பில் இருந்த ஆக்சிஜன் தீரும் நிலையில் இருந்ததால், உயிரைப் பணயம் வைத்து இந்த சாதனையை அவர் படைத்தார்.
சாகித்ய அகாடமி விருதினை வென்றார் எழுத்தாளர் தேவிபாரதி
2023ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்குத் தமிழில் தேவிபாரதியின் 'நீர்வழிப்படூஉம்' நாவல் தேர்வானது. நாவிதர் சமூகத்தின் வாழ்வியலைத் தன்னுடைய இந்நாவலில் தேவிபாரதி பதிவுசெய்திருந்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக, எளிய மக்களின் வாழ்வியலை நடையில் எழுதிவரும் தேவிபாரதியின் 'நிழலின் தனிமை' மற்றும் 'நட்ராஜ் மகராஜ்' நாவல்களும் புகழ்பெற்றவை.
சென்னையை மிரளவைத்த மிக்ஜாம்
வங்கக் கடலில் வலுப்பெற்ற மிக்ஜாம் புயல் டிசம்பர் 5-ந் தேதி கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி,டிசம்பர் 4 மற்றும் 5-ந் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையும், வெள்ளமும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. 2015 வெள்ளத்தை விட இந்த முறை கடும் பாதிப்பை மக்கள் சந்தித்தனர். மாநகரில் பரவலாக பல நாட்கள் நீர் சூழந்திருந்தது. பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். மின்சாரமும், தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டு, பொதுமக்களை முற்றிலுமாக முடக்கியது.
தென்தமிழ்நாட்டை புரட்டி போட்ட வெள்ளம்
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்தது. வரலாறு காணாத மழையால் தென் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. காயல்பட்டினத்தில் 95 செ.மீ. பேய் மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியில் தாமிரபரணி ஆறும், வடபகுதியில் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடின. ஆற்றில் வினாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதே நேரத்தில் மழைநீரும் ஆற்றில் கலந்ததால் வினாடிக்கு 2.5 லட்சம் கனஅடி தண்ணீர் கட்டுக்கடங்காத பெருவெள்ளமாக கரைபுரண்டு ஓடியது.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெய்த அதி கனமழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்தன. வெள்ளத்தில் கிராமங்கள் உருக்குலைந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
- சௌமியா அப்பர்சுந்தரம்