வயிற்றுவலி என சென்றவரின் மண்ணீரல் அகற்றம்... தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்!
வயிற்று வலி என சென்ற நபரின் மண்ணீரலை குடும்பத்தின் அனுமதியின்றி அகற்றிய தனியார் மருத்துவமனை. உறவினர்கள் மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி நாகராஜ்
(48). இவர் வயிறு வலி காரணமாக, கடந்த அக்டோபர் மாதம் 22 -ந் தேதி ஸ்ரீபெரும்புதூர்
அடுத்த தண்டலம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துமனையான, சவீதா
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு நாகராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இரைப்பையில் கட்டி இருப்பதாகவும், அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து 15 நாட்கள் கழித்து நேற்று முன்தினம் 7 ஆம் தேதி, நாகராஜிக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் கவனக் குறைவாலும், அலட்சியத்தாலும் மண்ணீரலை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் நாகராஜிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் இது சம்பந்தமாக நாகராஜனுடைய மனைவிக்கும், அவருடைய மகனுக்கும் தெரிவிக்காமல் மண்ணீரலை அகற்றி உள்ளனர். இதனால் நாகராஜனின் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக உறவினர்கள் மருத்துவரிடம் கேட்டபோது, எந்த ஒரு பதிலும்
சொல்லாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட நாகராஜனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரப்பரபான சூழல் நிலவியுள்ளது.