திருச்செந்தூரில் வரும் 14ம் தேதி பக்தர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! அமைச்சர் #SekarBabu தகவல்!
திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதியை வரும் அக்.14 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி செலவில் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக பெருந்திட்ட வளாகப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் தருவாயில் உள்ளது. இந்த சூழலில், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (அக்.9) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணிகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதிக்கான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதியை வரும் அக்.14 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர் சேகர் பாபு உடன் தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கூடுதல் ஆணையர் சுகுமார், திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், நகராட்சி துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.