#Hamas அமைப்பைச் சார்ந்தவர் என வைரலாகும் 2 கைகளை இழந்த சிறுவனின் படம் - உண்மை என்ன ?
This News Fact Checked by ‘Factly’
இவர் ஹமாஸ் அமைப்பைச் சார்ந்தவர் என இரண்டு கைகளையும் இழந்த சிறுவனின் படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்த உண்மைத் தன்மையை அறிய பேக்ட்லி முடிவு செய்தது. இதன்படி பேக்ட்லி மேற்கொண்ட உண்மை சரிபார்ப்பை விரிவாக காணலாம்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் காசா பகுதியிலிருந்து இடம் பெயர்ந்தனர். இப்போரில் இதுவரை 43, 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகாமானோ காயமடைந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக ஐநா மனித உரிமைகள் அமைப்பு சமீபத்தில் தெரிவித்தது.
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டப் போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் கொலை செய்தது. இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹஸன் நஸ்ரல்லாஹ் வீட்டின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல் அவரையும் கொலை செய்தது. மேலும் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் அடுத்த தலைவரான யஹ்யா சின்வாரும் கொல்லப்பட்டார்.
போர் நீடித்து வரும் நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பல நாடுகள் அழைப்பு விடுத்த போதிலும் ஹமாஸை அழிக்கும் வரை போரை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்த நிலையில் தினந்தோறும் பாலஸ்தீனம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கைகள் இல்லாத மற்றும் உடலின் பெரும்பாலான பகுதிகளில் காயம் ஏற்பட்டு கட்டுப் போடப்பட்ட ஒரு இளைஞனின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி இவர்தான் 07 அக்டோபர் 2023 தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதி முகமது மஹ்ரூப் என்கிற பின்னூட்டத்துடன் பரவியது. இதுகுறித்த உண்மைத் தன்மையை அறிய பேக்ட்லி இந்த செய்தியை ஆய்வுக்கு உட்படுத்தியது.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களின் வைரலான படத்தை Google லென்ஸை பயன்படுத்தி தேடுதலுக்கு உட்படுத்தியபோது அது ஆகஸ்ட் 2024 இல் ராய்ட்டர்ஸ் தளத்தில் வெளியான படங்களுக்கு அழைத்துச் சென்றது. இதேபோல சில அரபு ஊடங்களில் வெளியான செய்திகளையும் காட்டியது. இந்த செய்திகளின்படி, புகைப்படத்தில் இருப்பவர் 15 வயதான பாலஸ்தீனிய சிறுவன் தியா அல்-அடினி என்பது தெரிய வந்துள்ளது. 13 ஆகஸ்ட் 2024 அன்று, இஸ்ரேலிய தாக்குதலில் அவரது இரண்டு கைகளையும் அவர் இழந்தார். தியா அல்-அடினி இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்து காசாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தேடுதலானது 'அலமி' பட வலைத்தளத்தில் அதே சிறுவனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. “காசாவின் டெய்ர் அல் பலாஹ்வின் கிழக்கே அல்-கஸ்டல் டவர்ஸில் உள்ள அவரது குடியிருப்பை இஸ்ரேலிய இராணுவம் தாக்கியதில் பாலஸ்தீனிய இளைஞர் தியா அல்-அடினி பலத்த காயமடைந்தார். மேலும் தனது இரண்டு கைகளையும் இழந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என எழுதப்பட்டிருந்தது. இதே புகைப்படத்தை கெட்டி இமேஜஸ் இணையதளத்திலும் கண்டோம் . இந்த இணையதளம் அவரை தியா அல்-அதீன் என்றும் அடையாளப்படுத்தியது.
அடுத்து, 07 அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலால் கொல்லப்பட்ட போராளிகள், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் உறுப்பினர்களின் பட்டியல்கள் அடங்கிய செய்திக் கட்டுரைகளை சரிபார்த்தபோது அந்த பட்டியல் எதிலும் முகமது மஹ்ரூப் என்ற பெயர் இல்லை.
முடிவு :
சமூக வலைதளங்களில் பரவிய சிறுவனின் படம் ஆகஸ்ட் 2024 இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்த 15 வயது தியா அல்-அடியின் புகைப்படம் என்றும் அவர் ஒரு ஹமாஸ் போராளி என்று தவறான சித்தரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது என்பதும் உறுதியாகிறது.
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.