சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை விழித்திருந்து பார்த்த நபர்!
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் போது, நோயாளி விழித்திருந்த நிகழ்வு மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த ஜான் நிக்கோலஸ் (28) என்ற இளைஞருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின் போது இளைஞர் எந்த மயக்க மருந்துகளும் செலுத்தி கொள்ளாமல், வலி நிவாரண மருந்துகள் மட்டும் எடுத்துக் கொண்டு விழித்திருந்து சிகிச்சை முழுவதையும் பார்த்துள்ளார். இந்த வீடியோவை அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் மெமரியல் என்ற மருத்துவமனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
16 வயதிலிருந்தே இவருக்கு சிறுநீரக கோளாறுகள் இருந்து வந்துள்ளது. வருடங்கள் செல்ல செல்ல சிறுநீரக செயல்பாடு குறைய தொடங்கிய நிலையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு சிறுநீரகம் வழங்கியது இவரது நெருங்கிய நண்பர் பாட் வைஸ் 29. இதுகுறித்து அவர் நண்பர் தெரிவித்துள்ளதாவது;
“நான் சமைத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஜான் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான். அதில், ‘ சிறுநீரகம் தானம் தருபவர்களை தேடவேண்டிய நேரம் என மருத்துவர் கூறியுள்ளார்’ என இருந்தது. போனை வெறித்துப் பார்த்தேன். சற்றும் தயங்காமல் படிவத்தை நிரப்பினேன். என்னிடம் இரண்டு இருந்தது. அவருக்கு ஒன்று தேவைப்பட்டது. ஜான் என்னுடைய நல்ல நண்பன்” எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாவது;
“சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் போது ஒரு நோயாளி விழித்திருப்பது மருத்துவத்தில் இதுதான் முதல்முறை. நோயாளி அடுத்த நாளே வீட்டிற்கு சென்றார். இந்த செயல்முறை மயக்க மருந்தின் சில அபாயங்களை குறைக்கும். ஆபரேஷன் தியேட்டரில் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகத்தை உடலுக்குள் வைப்பது எப்படி இருக்கும் என்பதை காண்பித்தது நம்பமுடியாத அனுபவமாக இருந்தது” என கூறியுள்ளனர்.
இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து தற்போது வரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. பல கருத்துகளையும் பெற்று வருகிறது.