தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.