Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிறந்து 1மாதம் கூட ஆகாத பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்ற தாய்; 4 பேர் கைது!

09:14 AM Nov 21, 2023 IST | Web Editor
Advertisement

பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத பச்சிளம் குழந்தையை, பணத்திற்காக விற்ற தாய் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Advertisement

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள ஜீவா நகர் பகுதியில், பிறந்து ஒரு மாதமேயான பச்சிளம் குழந்தை, பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது என குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், குழந்தைகள் நல பாதுகாப்பு மைய அதிகாரி திருப்பதி, ஜீவா நகர் பகுதியில் ரகசியமாக விசாரணை நடத்தினார்.

அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் முனியசாமி-முத்து லட்சுமி தம்பதியருக்கு, ஏற்கனவே 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதும், நவம்பர் 10 ஆம் தேதி மற்றொரு ஆண் குழந்தையை முத்துலட்சுமி பிரசவித்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து முத்து லட்சுமியை நேரில் சந்தித்துப் பேசிய, குழந்தைகள் நல பாதுகாப்பு மைய அதிகாரி திருப்பதி, பிறந்த பச்சிளம் குழந்தை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது முத்து லட்சுமி அளித்த பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், அவர் அதுகுறித்து சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் குழந்தையின் தாயான முத்து லட்சுமியைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை வளர்க்க போதுமான பொருளாதார வசதி இல்லாமல், பணத்திற்கான விற்றது தெரியவந்தது. பின்னர் முத்து லட்சுமியை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், முத்து லட்சுமி குழந்தையை வளர்க்க முடியாது எனக்கூறி, தனது தோழியான முகவூரைச் சேர்ந்த ராஜேஸ்வரியிடம் புலம்பியது தெரியவந்தது.

அப்போது அவர் தனக்குத் தெரிந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரை அணுகி ஆலோசனை கேட்டுள்ளார். பின்னர் ஜெயபால் கூறியபடி ஈரோடு மாவட்டம் மாணிக்கபாளையத்தைச் சேர்ந்த அசினா என்பவரிடம், முத்து லட்சுமியின் குழந்தையை மூன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அதனடிப்படையில் ஈரோடு விரைந்த தனிப்படை போலீசார் குழந்தை விற்பனையை தொழிலாக நடத்தி வந்த அசினா, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ரேவதி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசார், அதனை குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட அசினா உள்ளிட்டோர் மீது ஏற்கனவே குழந்தை கடத்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அந்த வழக்குகளில் ஜாமின் பெற்று தற்போது வெளியே வந்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயபால் என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத பச்சிளம் குழந்தையை, பெற்ற தாயே பணத்திற்காக விற்பனை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Next Article