வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!
தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஏப்.12ம் தேதி வரை மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படியுங்கள் : நகை வாங்க இதுதான் சரியான நேரம்… 3 நாட்களில் ரூ.2,200 குறைந்த தங்கம் விலை!
இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கனமழை கொட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று (ஏப்.7) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏப்.10-ம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.