திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அதிகளவில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்!
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை
ஒதுங்குவதால் கடலில் புனித நீராடும் பக்தர்களுக்கு உடல் உபாதை ஏற்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை உடனே அப்புறப்படுத்த பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருச்செந்தூர் கோயில் கடற்கரையில்
அதிகளவில் கண்ணாடி போன்ற ஜெல்லி மீன்கள் கரை ஒதங்குவதாகவும், இதனால் கடலில் புனித நீராடிய பக்தர்களுக்கு தோல் பாதிப்பு மற்றும் அலர்ஜி போன்று உடல் ஒவ்வாமை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கடலின் ஆழப்பகுதியில் இருக்ககூடிய இந்த வகை ஜெல்லி மீன்கள் ஆண்டுதோறும் மே மற்றும் ஜூன் மாதங்களில் கரை ஒதுங்குவதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஜெல்லி மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே கோயில் பாதுகாப்பு குழுவினர்கள் கடலில் பிடிப்பட்ட ஜெல்லி மீன்களை கோயில் இணை ஆணையரிடம் காண்பித்தனர். இதுகுறித்து கோயில் இணை ஆணையர் கார்த்திக் கூறுகையில், "கோயில் கடற்கரையில் ஜெல்லி வகை மீன்கள் அதிக அளவில் காணப்படுவதாக பக்தர்கள் என்னிடம் தெரிவித்தனர். இதுகுறித்து மீன்வளத்துறைக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
அதன் பிறகு ஜெல்லி மீனின் தன்மை குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் இது போன்ற ஜெல்லி வகை மீன்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த கோயில் வளாகத்தில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். அதனுடன் கடற்கரையில் எச்சரிக்கை போர்டு வைக்கப்படும்" என தெரிவித்தார்.