சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது!
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்திற்கு
உட்பட்ட தொட்ட காஜனூர், பாளையம், தர்மாபுரம், மல்குத்திபுரம் ஆகிய கிராமங்களில்
இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் புகுந்த சிறுத்தை 10-க்கும் மேற்பட்ட ஆடு, பசு மாடுகள் மற்றும் காவல் நாய்களை வேட்டையாடி வந்தது. இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு இடங்களில் கூண்டுகள் அமைத்து அதில் நாயை கட்டி வைத்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மல்குத்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த
சிவசுப்பிரமணியம் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தை, அவரது வீட்டு
வாசல் முன்பு நடமாடிய காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அவரது தோட்டத்தில் நேற்று இரவு கூண்டு வைத்தனர். அதில் நாய் ஒன்றையும் கட்டி வைத்தனர்.
பின்னர் அங்கு வந்த சிறுத்தை, கூண்டிற்குள் கட்டி வைக்கப்பட்ட நாயை பிடிப்பதற்காக கூண்டுக்குள் நுழைந்தது. அப்பொழுது சிறுத்தை வசமாக கூண்டிற்குள் சிக்கியது. இது ஆண் சிறுத்தை எனவும், அதற்கு 5 வயது இருக்கும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தைக்கு வனத்துறை மருத்துவர் சதாசிவம், இன்று மாலை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு சிறுத்தை மயக்கமடைந்தவுடன், அதனை வேறு பெரிய கூண்டிற்கு மாற்றினர். அதன் பிறகு வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையை வாகனத்தில் ஏற்றி, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக கொண்டு சென்றனர்.