பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த ஏராளமான பக்தர்கள்!
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளதால் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக கருதப்படுகிறது. பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் இந்த கடற்கரையில் அமர்ந்திருந்து நிலவை ரசித்து விட்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது.
கடந்த ஒரு சில மாத காலமாக பௌர்ணமி தினத்தன்று திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்கி சென்றால் உடல் அளவிலும் மன அளவிலும் பல்வேறு பயன்கள் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் கூறியது, இணையதளத்தில் வைரலானது. இதனையடுத்து இந்த நாளன்று கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (மார்ச்.24) பங்குனி மாத பௌர்ணமியொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக சென்னை, கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு
மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயில் கடற்கரைக்கு வந்தனர். இதனால் கோவில் கடற்கரை மட்டுமல்லாது வளாகம் முழுவதும் பக்தர்கள்
கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தற்போது கோயிலில் 300 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வளாக பணிகள்
நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் பக்தர்கள் தங்க வைக்க போதுமான வசதிகள்
இல்லை. இந்த நிலையில் கூடிய விரைவில் அதற்கான வசதிகளை செய்து தருவதாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தெரிவித்தார்.