ஜப்பான்காரன்... ஜப்பான்காரன்தாயா... உப்பு சுவை தரும் மின்சார கரண்டி அறிமுகம்!
உப்புச் சுவையை தரக்கூடிய மின்சார கரண்டியை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு கரண்டியின் விலை ரூ.10,500 எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானிய குளிர்பான நிறுவனமான கிரின் ஹோல்டிங்ஸ், ஒரு வித்தியாசமான மின்சார கரண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. கரண்டி தானே இதில் என்ன இருக்கும் என நாம் ஆச்சர்யப்படலாம். நடிகர் கவுண்டமணியின் “ஜப்பான்காரன் ஜப்பான்காரன்தாய்யா” எனும் டைலாக்கை இவர்கள் நிரூபித்துள்ளனர். ஏனெனில் இந்த கரண்டியால் நாம் சாப்பிட்டால் உணவுகளில் உப்பு பயன்படுத்த தேவையில்லையாம். இந்த கரண்டி செயற்கையாக உப்புச் சுவையை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கரண்டியை பயன்படுத்துவதன் மூலம் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய உப்பின் அளவை மூன்றில் ஒரு பங்கு வரை குறைக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 60 கிராம் எடை கொண்ட இந்த கரண்டியானது ரீ சார்ஜபிள் லித்தியம் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது உப்பு இல்லாமல், நாக்கிற்கு உப்பு சுவையை கொடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
பின்னர் ஜூன் மாதத்தில் சில்லறை விற்பனையாளரிடம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக அளவில் 10 லட்சம் எலெக்ட்ரிக் கரண்டிகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது.