“மத்திய அரசைக் கண்டித்து நாளை டெல்லியில் மாபெரும் போராட்டம்" - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு!
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, அவரது தலைமையில் கர்நாடக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லியில் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
கர்நாடக மாநில மக்கள் செலுத்தும் வரிப்பணம், மாநிலத்தினுடைய இக்கட்டான நிலையின் போது பயன்படவில்லை. அந்த பணம் எல்லாம் வடமாநிலங்களுக்கு செல்கின்றன. 15-வது நிதி கமிஷனுக்குப் பிறகு வரிப் பகிர்வு பங்கு குறைந்துள்ளது. இது கர்நாடக மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அநீதியை தாங்க முடியாது. நம்முடைய மாநிலத்தின் நலத்தை பாதுகாக்க, நியாயமான முறையில் நடத்த நாம் ஒன்றாக இணைந்து வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர் "SouthTaxMovement" ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பிப்ரவரி 7-ந்தேதி (நாளை) டெல்லியில் போராட்டம் நடத்துகிறார்கள். மத்திய அரசு கர்நாடக மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்படுவதற்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் சித்தராமையா கலந்து கொள்ள இருக்கிறார்.
தெற்கு மாநிலங்களின் வரிப்பணம் வடக்கு மாநிலங்களுக்கு சென்றடைகிறது. இதனால் ஒரு போதும் நமக்கு முன்மாதிரியாக இருக்க முடியாது. இந்த தவறான எண்ணத்தை அனைவரும் கைவிட வேண்டும். கடின உழைப்பால் வலுவான தேசத்தை உருவாக்கி வரும் கர்நாடகா இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது.
இதனிடையே, மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் நாளை நடைபெறும் போராட்டத்தில், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் சித்தராமைய்யா கேட்டுக் கொண்டுள்ளார்.