தனியார் நிதி நிறுவனத்தால் பறிமுதல் செய்யப்பட்ட வீடு... சாலையில் குழந்தைகளுடன் தவித்த பெண்... உதவிக்கரம் நீட்டிய LuLu குழுமம்!
கடனை கட்டாததால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பெண்ணிற்கு, லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசுப் அலி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணும், அவரது கணவரும் கடந்த 2019ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் கடன் வாங்கியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த வங்கி சாரா நிதி நிறுவனமான (NBFC) மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். இதனிடையே கடந்த 2021ஆம் ஆண்டு சந்தியாவையும், அவர்களது இரண்டு குழந்தைகளையும் விட்டு விட்டு அவரது கணவர் பிரிந்து சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை, சந்தியா கட்டாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கடன் தொகை வட்டியுடன் கிட்டத்தட்ட ரூ.8 லட்சமாக உயர்ந்தது. இதனையடுத்து பணத்தை திரும்ப பெறும் முயற்சிகளில் நிதி நிறுவனம் ஈடுபட்டு வந்துள்ளது. நான்கு முறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இச்சூழலில் கடந்த வாரம் சந்தியா தான் வேலை செய்யும் துணிக்கடையிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த நிதி நிறுவனம் சந்தியாவையும், அவரது குழந்தைகளையும் வீட்டிலிருந்து வெளியேற்றி, வீட்டை பூட்டியுள்ளனர். வீட்டிற்குள் இருக்கும் பொருட்களையும் எடுக்ககூடாது என தெரிவித்துள்ளனர். சந்தியாவும், அவரது குழந்தைகளும் சாலையில் தவித்த காட்சி அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த செய்தி கேரள ஊடகங்களில் வெளியானது. இதனைப்பார்த்த லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசுப் அலி, அந்த பெண்ணின் முழுகடனையும் திருப்பிச் செலுத்துமாறு இந்தியாவில் உள்ள தனது குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் வங்கி நிரந்தர வைப்புத்தொகையாக அப்பெண்ணுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. இவரின் இச்செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். யூசுப் அலி இல்லாமல் இருந்திருந்தால், தானும் தன் குழந்தைகளும் கடும் இன்னல்களை சந்தித்திருப்போம் என அப்பெண் தெரிவித்துள்ளார். இந்தியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் புகழ்பெற்று விளங்கும் ரீடைல் நிறுவனம்தான் இந்த லுலு குழுமம்.
அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லுலு குழுமம், பல்வேறு நாடுகளில் கிளை விரித்து வர்த்தகம் செய்து வருகிறது. இதன் பிரதான இலக்கு என்பது பிரம்மாண்ட மால்களை கட்டமைத்து ஒரே இடத்தில் சகல வசதிகளையும் கொண்டு வருவது தான். இந்நிறுவனம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தடம் பதித்துள்ளது.