“செஸ் விளையாட்டிற்கென ‘ஹோம் ஆஃப் செஸ்’ அகாடமி உருவாக்கப்படும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
செஸ் விளையாட்டிற்கென ‘ஹோம் ஆஃப் செஸ்’ என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் கொடுத்து குகேஷ் வாழ்த்து பெற்றார். பின்னர் மரத்தால் செய்யப்பட்ட செஸ் போர்ட்டை முதலமைச்சருக்கு குகேஷ் பரிசாக வழங்கினார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
“புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்ம சென்னை பையன் குகேஷ். அவருடைய பெற்றோரை போலவே நானும் மகிழ்ச்சியில் உள்ளேன். எப்போதும் புன்னகையோடு இருக்ககூடிய முகமும், விமர்சனங்களை தாங்கும் இயல்பும் தான் வெற்றிக்கு முக்கியக் காரணம்.
தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும் தன்னுடைய கனவை நனவாக்கி இருக்கிறார். 7 வயதில் பயிற்சிக்குள் நுழைந்து 9 வயதில் கேண்டிடேட் மாஸ்டர் பட்டத்தை வென்று, 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று, இன்று உலக சாம்பியனாகி இருக்கிறார். இவை எல்லாவற்றையும் சாதிக்க குகேஷ் எடுத்துக் கொண்டது 11 ஆண்டுகள் தான். இதற்கு பின்னால் இருக்கக்கூடிய உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இலக்கை நோக்கிய பயணம். இதைத்தான் தமிழக இளைஞர்கள் எல்லோரும் இன்ஸ்பிரேஷனாக கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் தான் உங்களை எல்லாம் அழைத்து குகேஷுக்கு இந்த பாராட்டு விழா நடத்துகிறோம். ஒரு குகேஷின் வெற்றி இலட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும்.
அவரின் வெற்றியைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கியுள்ளோம். 2001ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியனாக விஸ்வநாதன் ஆனந்த் பரிசு பெற்றார். அவரை பாராட்டும் வகையில் இதுபோன்ற பாராட்டு விழாவை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சென்னையில் நடத்தினார். 2007ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்திற்கு, ரூ.25 லட்சம் காசோலை வழங்கி பாராட்டினார் கருணாநிதி. இந்த இரண்டு பேரையும் பாராட்டும் வாய்ப்பு நமது திமுக அரசுக்கு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.
விளையாட்டுத் துறையையும், வீரர்களையும் போற்றி பாதுகாக்கும் அரசு திமுக. தமிழ்நாட்டில் விளையாட்டை ஊக்குவிக்க ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை சிஐஏ அங்கீகரித்துள்ளது. இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் என தமிழ்நாட்டை சொல்லும் அளவிற்கு, விளையாட்டுத் துறையை சிறப்பாக கவனித்து வரும் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
செஸ் விளையாட்டை பொறுத்த வரை தமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய வரலாறு உள்ளது. இந்தியாவின் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டிற்கென ‘ஹோம் ஆஃப் செஸ்’ என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அகாடமியின் மூலம் தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன். இது குகேஷிற்கான பாராட்டு விழா மட்டுமல்ல. விளையாட்டில் சாதிக்க வேண்டும் என ஆர்வம் கொண்டவர்களை ஊக்குவிக்கும் விழா. எதிர்காலத்தில் இந்த மேடையில் உங்களுக்கான பாராட்டு விழா நடைபெறும். கல்வி, விளையாட்டு என இரண்டு துறைகளிலும் தமிழ்நாடு இளைஞர்கள் சாதிக்க வேண்டும்.
அதனால்தான் கல்வியை ஊக்குவிக்கும் பல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். திமுக அரசின் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செஸ் விளையாட்டை போல வாழ்க்கையில் வெற்றிப் பெற எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி முக்கியமல்ல. பங்கேற்பதுதான் முக்கியம். பங்கேற்பதே வெற்றிதான். குகேஷின் வெற்றி உங்களுக்கு வழிகாட்டும். வாய்ப்புகளை பயன்படுத்துங்கள், உழைப்பை கொடுங்கள், வெற்றிப் பெறுங்கள்” என தெரிவித்தார்.